‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள்.
அதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா உலகம் அறியும். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். அதனாலேயே அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் அவரை, மொட்டையடிக்க வேண்டும் என்று நான் கேட்பது நியாயமாக இருக்குமா?. படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றி விட்டார். நானே தயங்கியபோதும், அவர் திடமான முடிவோடு வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதில் ஒரு தோற்றத்தை பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசூஸா ஆகியோர் வடிவமைத்திருக்கிறார்கள். அதர்வா இந்த ப்ரோஸ்தடிக் ஒப்பனைக்காக பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது. இத்தகைய கடும் முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு நடிகரும், கொஞ்சம் ஓய்வெடுக்கவே விரும்புவர். ஆனால் அதர்வா உடனடியாக படத்தில் முக்கியமான இடத்தில் வரும் காட்சிகளுக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார். இந்த காட்சிகளை சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது. எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே அவரின் தியாகத்துக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. எடிட்டிங் செய்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார்.