‘ஆர்யன்’ (விமர்சனம்.) வித்தியாசமான க்ரைம் த்ரில்லர்!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து, அறிமுக இயக்குநர் பிரவீன் கே இயக்கியுள்ள திரைப்படம், ஆர்யன். இதில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி, கருணாகரன் ,  அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவையும், ஜிப்ரான் இசையமைப்பினையும் செய்துள்ளனர். படத்தொகுப்பினை ஷான் லோகேஷ் செய்துள்ளார்.

ஆர்யன் ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லர். பிரபல தனியார் தொலைக்காட்சியில், ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருபவர், ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவரது நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெகு பிரபலம். ஒரு நாள், பிரபல நடிகர் ஒருவரிடம் அவர் குறித்த சர்ச்சைகள் பற்றி விவாதம் நடந்து வருகிறது. அப்போது, பொது மக்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் அனைவரையும் சிறை பிடிக்கிறார். ஒவ்வொருவராக குறிப்பிட்ட நேரத்தில் கொலை செய்யப்போவதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள். என சவால் விடுக்கிறார். மக்கள் மத்தியில் பீதி ஏற்படுகிறது. காவல்துறை, ஏசிபி விஷ்ணு விஷால் தலைமையில், ஒரு குழுவை அமைக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? செல்வராகவன் யார், ஏன் அப்படி நடந்து கொண்டார்? என்பதே, ஆர்யன் படத்தின் பரபரப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

அறிமுக இயக்குநர் பிரவீன் கே, இதுவரை வந்திராத ஒரு கதையை திரைப்படமாக்கியிருக்கிறார். மிகவும் வித்தியாசமான, யாரும் எளிதில் யோசித்திராத புதிய கதை. அதற்காக அவரை பாராட்டலாம். அதுவும், படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்தே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. ‘ஆர்யன்’ என்ற தலைப்பே அடுத்தடுத்த கொலைகளுக்கான புதிர் தான். என்பது கூடுதல் சுவாரசியம். இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்விகள் படம் பார்ப்பவர்களுக்கு தோன்றும் போது, அதற்கான காரணத்தை இயக்குநர் விளக்கியிருப்பது, சிறப்பு. போகிற போக்கில் ஊடகங்களின் தற்போதைய நிலையை சாடியிருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் சில கொலையில் லாஜிக் இல்லை. அதோடு, செல்வராகவன் செய்யும் கொலைகளுக்கான காரணங்கள் அபத்தம்! விஷ்ணு விஷாலுக்கும், மானசா சௌத்ரிக்குமான ‘டைவர்ஸ்’ காட்சிகள் எதற்கு? அதனால், கதைக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

விஷ்ணு விஷால், ஏசிபி அறிவுடை நம்பி கதாபாத்திரத்தில் கம்பீரமாக தோன்றியிருக்கிறார். கொலை செய்யப்படுபவர்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சியில், அவர் காட்டும் வேகமும், புத்திசாலித்தனமும் ரசிக்க வைக்கிறது. ஒரு புத்திசாலித்தனமான காவல் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். அவருடைய கதாபாத்திரத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார்.

இயக்குநர் செல்வராகவன். நடிகராக அறிமுகமான காலத்தில், இந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் அலட்டலில்லாமல் நடித்திருக்கிறார். இவருடைய அழகர் என்ற வித்தியாசமான  கதாபாத்திரத்தில், நடிகர் அமீர்கான் நடிக்க விருப்பம் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

ரியாலிட்டி ஷோ ஆங்கராக ஷ்ரத்தா ஸ்ரீநாத். விஷ்ணு விஷாலிடம் டைவர்ஸ் கேட்டு போராடும் மனைவியாக மானசா சௌத்ரி, தொலைக்காட்சி நிருபராக கருணாகரன், கமிஷனராக அவினாஷ், பிரபல நடிகராக  தாரக் பொன்னப்பா, ஜீவா சுப்ரமணியம் உள்ளிட்டோரும் அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

காட்சிகளின் வேகத்தை ஜிப்ரானின் பின்னணி இசை அதிகரிக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கிறது.

ஷான் லோகேஷின் படத்தொகுப்பில் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது.

இதுவரை சொல்லப்படாத, ஒரு கதையை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் பிரவீன் கே, அந்த கொலைகளுக்கான நியாயமான காரணத்தை சொல்லாமல், வேறு ஒரு காரணத்தை சொல்லியிருப்பது அபத்தம். மேலும் அப்பாவிகளை கொல்வது எவ்விதத்தில் நியாயம்? இதன் காரணமாக ஆர்யன் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.

க்ரைம், சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்களுக்கு ஆர்யன் பிடிக்கும்!