‘மெஸன்ஜர்’ – விமர்சனம்!

ஶ்ரீராம் கார்த்திக், மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹிம், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், மெஸன்ஜர். ‘பிவிகே ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில், பி.விஜயன் தயாரித்திருக்கும்,  இத்திரைப்படத்தினை, எழுதி இயக்கியிருக்கிறார், ரமேஷ் இளங்கமணி. ஒளிப்பதிவு, பால கணேசன் ஆர்.  இசை, அபுபக்கர் எம்.

ஶ்ரீராம் கார்த்திக், ஐ டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்.  தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியின் காரணமாக, துக்கிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்கிறார். அச்சமயத்தில், அவரது மொபைல் போனிலிருந்து மெஸன்ஜர் மூலமாக ஒரு செய்தி வருகிறது. அதாவது, ‘நீங்கள் தற்கொலை செய்யாதீர்கள்’. என வருகிறது. அந்த மெஸன்ஜர் வழியாகவே யார் என்று விசாரிக்கிறார். அதன் பின்னர் ஶ்ரீராம் கார்த்திக்கின் அப்பாவின் நெருங்கிய நண்பரும், போலீஸூமான லிவிங்ஸ்டன் உதவியுடன், அந்த பெண்ணின் ஊருக்கு சென்று  மேலும் விசாரிக்கின்றனர். அப்போது தான் தெரிய வருகிறது. இறந்து போன ஒரு பெண், தன்னிடம் தொடர்பு கொண்டு வருகிறார், என்று. அதன் பிறகு, இறந்து போன பெண்ணையே காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘மெஸன்ஜர்’ வித்தியாசமான கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

இந்த வாரம் வெளிவந்த ‘ஆர்யன்’ திரைப்படம் போலவே, ‘மெஸன்ஜர்’ திரைப்படமும் வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் வெளிவந்துள்ளது. ஒரு சின்ன பட்ஜெட்டில் என்ன முடியுமோ, அதை செய்திருக்கிறார், இயக்குநர் ரமேஷ் இளங்கமணி.  எத்தனையோ, வித்தியாசமான காதல் திரைப்படங்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், ஆன்மாவை காதலித்து, குழந்தை பெற்று கொள்ளும் காதலையும் பார்க்கும்படியாக வந்திருக்கிறது இந்தப்படம். வழக்கமான உருட்டல், மிரட்டல் இல்லாமல், ஆன்மா என்றாலே அபார சக்திகளை பெற்றவர்களாக பார்த்த ரசிகர்களுக்கு, இதில், அப்படி எந்த சக்தியும் இல்லாமல் காட்டியிருப்பதும் புதிதாகவே இருக்கிறது. அதிலும், முதலிரவு காட்சி எல்லாம் அல்ட்டிமேட்!

படத்தில் நடித்திருந்த ஶ்ரீராம் கார்த்திக், மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹிம், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் உள்ளிட்டவர்கள் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அபுபக்கர் M. இசை, படத்திற்கு பெரிய பக்க பலமாக இருக்கிறது. காட்சிகளை இசையின் மூலமாகவே நகர்த்தியிருப்பது சிறப்பு. குறிப்பாக முதலிரவு காட்சி ரசிக்கும்படி இருக்கிறது. விரசத்திற்கு இடம் கொடுக்காமல் காட்சிகளை அமைத்த இயக்குநரை பாராட்டலாம். அதே நேரத்தில், அம்மாவுக்கும் மகனுக்குமான உரையாடல் சற்றே நெருடல். அதை தவிர்த்திர்க்கலாம்.

ஒளிப்பதிவாளர் பால கணேசன் R.  ன் ஒளிப்பதிவும் குறை சொல்லும்படி இல்லை.

ஆங்காங்கே காணப்படும் லாஜிக் மீறல்களை தவிர்த்து, மெதுவாக செல்லும் காட்சிகளை இன்னும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செய்திருந்தால், அனைவருக்கும் பிடிக்கும் படமாக, ‘மெஸன்ஜர்’ அமைந்திருக்கும்!