தன்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, கே. பாக்யராஜ் , அருள்தாஸ், தமிழ், நயானா சாய் , ஸ்வேதா டோரத்தி, ஜாக் அருணாசலம், ரங்கா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பிபி 180’ திரைப்படத்தை எழுதி இயக்கிருக்கிறார் ஜே பி. இவர் இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்தவர், என்பது குறிப்பிடதக்கது. ஒளிப்பதிவினை ராமலிங்கம் செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், ஜிப்ரான்.
மனிதர்களை கொடூரமாக கொலை செய்யும் ரௌடிக்கும், பிணக்கூறாய்வு செய்யும் ஒரு டாக்டருக்கும் இடையே வெடிக்கும் ஈகோ மோதலால் நடக்கும் விபரீதங்களே ‘பிபி 180’ .
அரசியல், அதிகார பலமிக்கவர் (கே. பாக்யராஜ்) லிங்கம். இவரது விசுவாசி, சென்னையின் மிகப்பெரிய ரௌடி (டேனியல் பாலாஜி) அர்னால்டு. ஒரு சாலை விபத்தில் லிங்கத்தின் மகள் உயிரிழக்கிறார். அவரது உடல், (தான்யா ரவிச்சந்திரன்) டாக்டர் தங்கம் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவரும் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு தயாராகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அர்னால்டின் எச்சரிக்கையை மீறி டாக்டர் தங்கம் செயல்படுகிறார். இதனால் அவருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது. இதையடுத்து டாக்டர் தங்கம் என்ன செய்தார்? போஸ்ட்மார்ட்டம் செய்வதை ஏன் தடுக்கிறார்கள்? என்பது தான், ‘பிபி 180’ கதை.
முழுப்படத்தினையும் தன்யா ரவிச்சந்திரனே சுமக்கிறார். எந்த பிரச்சனையானாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணாக, நோயாளியிடம் பரிவுடன் நடந்து கொள்ளும் டாக்டராக நடித்து, ரசிகர்களை தன் பக்கம் எளிதில் ஈர்த்துவிடுகிறார். ரௌடி அர்னால்டு கதாபாத்திரத்தில், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். போலீசை டம்மியாக்கி, அவரது கதாபாத்திரத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்திருப்பதை ஏற்க முடியவில்லை. இயக்குநர் கே.பாக்யராஜின் கதாபாத்திரம் பலமிக்கதாக காட்டப்பட்டதால், எந்த பிரயோஜனமும் இல்லை. அருள்தாஸ், தமிழ், ஜாக் அருணாச்சலம், ஸ்வேதா டோரத்தி, ரங்கா, நயானா சாய் ஆகியோர் தங்களால் முடிந்தவரை நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் திரைப்படத்தை கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஜெ.பி, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் தோற்றுப்போயிருக்கிறார்.
சென்னை காவல் ஆணையாளரை, காலில் கயிற்றைக்கட்டி கடலுக்குள் இழுத்து செல்வதெல்லாம், கற்பனைக்கும் எட்டாத கற்பனை. இயக்குநர் ஜே பி.க்கு எப்படி சாத்தியமானது!?
‘பிபி 180’ (BP180) – 90/60