கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா கல்லாபு, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘இந்தியன் பீனல் லா’. எழுதி இயக்கியிருக்கிறார், கருணாநிதி. இசை, அஸ்வின் விநாயகமூர்த்தி. ஒளிப்பதிவு, எஸ். பிச்சுமணி. ‘ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
கிஷோர், அவரது நண்பர் நடத்தி வரும் டிராவல்சில் வேலை செய்து வருகிறார். அதே டிராவல்சில் வேலை செய்யும் மற்றொரு நண்பருக்கு, கம்பெனியின் பணத்தை எடுத்து கொடுத்து கடனாக கொடுத்து விடுகிறார். இதனால், கிஷோர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
இந்நிலையில், கிஷோர் சொந்தமாக கார் வாங்கி அவரே ஓட்டி வருகிறார். கிஷோர் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும் நிலையில், தங்கையின் காதலன் டிடிஎஃப் வாசனால், அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்படுகிறது. அதோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கெட், லாக் அப்பில் ஒருவரை அடித்து கொன்றுவிட்டு, அந்த பழியை கிஷோர் மீது போடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான், ‘இந்தியன் பீனல் லா’. படத்தின் மீதிக்கதை.
குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர், தனது வழக்கமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அவரது திறமைக்கு, இந்த கதாபாத்திரம் பெரிதான சாவல் எதையும் கொடுக்கவில்லை. கிஷோரின் மனைவியாக, வசந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி, பாராட்டும்படி நடித்திருக்கிறார். குஷிதா கல்லாபுவின் காதலராக, அன்பு எனும் கதாபாத்திரத்தில், சற்றே தடுமாற்றத்துடன் நடித்திருக்கிறார், டிடிஎஃப் வாசன். அக்ஷன் காட்சிகள் பரவாயில்லை. கனிமொழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், குஷிதா கல்லாபு. அழகாக இருக்கிறார். நடிப்பில் பெரிதாக குறை சொல்லும்படி இல்லை. போஸ் வெங்கட் , ஹரிஷ் பெராடி, ஜான் விஜய் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.