‘ரிவால்வர் ரீட்டா’ – (விமர்சனம்) டம்மி பீசு!

‘Passion Studios’ மற்றும் ‘The Route’ நிறுவனங்களின் சார்பில், சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், JK சந்துரு.  இதில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில் வர்மா, அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்‌ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாண்டிச்சேரியை அச்சுறுத்தும் ரௌடிகளில் முக்கியமான ரௌடி சூப்பர் சுப்பராயன். இவர் ஒரு சபலிஸ்ட். இவருக்கும் ரௌடி அஜய் கோஷூக்கும் இடையே நடந்த மோதலில், அவரது சகோதரரின் தலையை துண்டித்ததுடன், அஜய் கோஷின் கண்ணையும் நோண்டி அனுப்புகிறார். இதனால் பழி தீர்க்க நினைக்கும் அஜய் கோஷ்  சூப்பர் சுப்பராயன் தலைக்கு 4 கோடி ரூபாய் அறிவிக்கிறார். ரௌடி கல்யாண் மாஸ்டர் கோஷ்டி, சூப்பர் சுப்புராயனை போட்டுத்தள்ள முடிவு செய்கிறது.

ராதிகா சரத்குமாரின் மகளான கீர்த்தி சுரேஷ், அவரது அக்கா குழந்தையின் பிறந்த நாளை, வீட்டில் கொண்டாட, அதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறார். இந்நிலையில், சபலிஸ்ட் சூப்பர் சுப்புராயன், தவறுதலாக இவர்களது வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது நடக்கும் தகறாரில், சூப்பர் சுப்புராயனுக்கு தலையில் அடிபட்டு இறந்து போகிறார். இறந்து போனது மிகப்பெரிய ரௌடி என்பது தெரிய வர, ராதிகா சரத்குமாரும் அவரது குடும்பமும் அந்த உடலை மறைக்க திட்டமிடுகிறது. கல்யாண் மாஸ்டர் அந்த உடலை கைப்பற்றி அஜய் கோஷிடம் கொடுத்து 4 கோடி ரூபாயை பெற நினைக்கிறார். இந்த விஷயம் தெரியாமல், ரௌடி சூப்பர் சுப்பராயனின் மகன்களான சுனில் வர்மாவும், ரெடின் கிங்ஸ்லியும் தேடி வருகிறார்கள். இதன் பிறகு நடக்கும் கலாட்டா களேபரங்கள் தான், ‘ரிவால்வர் ரீட்டா’.

‘ரிவால்வர் ரீட்டா’ டைட்டில் ஒரு பவர்ஃபுல்லான டைட்டில். ஆனால், கதைக்கும் அந்த தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதையின் நாயகியான கீர்த்தி சுரேஷ் சண்டையிடும் காட்சிகளும் இல்லை. க்ளைமாக்ஸில், ஒரு சின்ன பிட்டு வரும் அவ்ளோதான்! சரி காமெடி காட்சிகளாவது நல்லாயிருக்கான்னு பார்த்தா, அதுவும் இல்லை. எல்லாமே கடிக்காமெடியும், ஓவராக்டிங்கும்மாத்தான் இருக்கு. ராதிகா சொல்ற ‘சுட்ருங்க மாப்ளே’ காட்சிப் போல, சில காட்சிகள் தான் ரசிக்கும்படியா இருக்கு. இது, இந்தப்படத்தை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கிறது.

நடிகர், நடிகையர் பட்டாளத்தை சரியாக பயண்படுத்தாமல் விட்டுவிட்டார், இயக்குநர் JK சந்துரு…

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே! ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா, காட்சிகளை கலர் ஃபுல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.

‘கோலமாவு கோகிலா’ போல் ஒரு படத்தை கொடுக்க நினைத்த, எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, ஏமாற்றி விட்டார்.

மொத்தத்தில், ‘ரிவால்வர் ரீட்டா’ –  டம்மி பீசு!