உதயா தீப், ஆதேஷ் பாலா, கவிதா சுரேஷ், யாசர், மாஸ்டர் அஜய், பிரேம் கே. சேஷாத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘சா வீ’ . எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்டனி அஜித்.
நாயகன் உதய் தீப், தனது அப்பா காதல் கல்யாணம் செய்து கொண்டதற்காக, அவரை தன்னுடைய தாய்மாமா கொலை செய்ததாக கருதுகிறார். எனவே அவர் மீது எப்போதும் கோபத்தில் இருந்து வருகிறார், உதய் தீப். ஆனால், அவர் பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில், ஒரு விபத்தில் உதய் தீப்பின் மாமா இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்படுகிறது. அந்த இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிவிட, உடலை பார்த்து கொள்ளும் பொறுப்பு உதய் தீப்புக்கு கொடுக்கப்படுகிறது. மறு நாள் காலையில், உடல் காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில், ஆதேஷ் பாலா தலைமையில் காவல்துறை களமிறங்குகிறது. உதய் தீப் காதல் என்ன ஆனது? காணாமல் போன அவரது மாமா உடல் என்ன ஆனது? என்பது தான், ‘சா வீ’ படத்தின் கதை.
முதலில் ‘சாவு வீடு’ எனப்பெயரிடப்பட்ட இந்தப்படம், பிளாக் காமெடி ஜானரில் உருவாகியிருக்கிறது. போதை பழக்கத்திற்கு எதிராக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், இன்றைய காலத்திற்கு ஏற்ற படம். அதற்காக இப்படத்தின் இயக்குநர் ஆண்டனி அஜித்தை பாராட்டலாம். பிணம் காணாமல் போவதின் மர்மம். அவரின் மர்மமான இறப்பு, போதைப்பொருள் பயண்படுத்தல். இவற்றை வைத்து தன்னால் முடிந்த அளவு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், ஒரு சூப்பரான பிளாக் காமெடிப்படம் உருவாகியிருக்கும்.
உதய் தீப், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். மாமாவை பிடிக்காது. ஆனால் அவரது மகளை பிடிக்கும் கதாதாப்பாதிரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். உதய் தீப்பின் முறைப்பெண்ணாக கவிதா சுரேஷ். பெரிதாக குறை சொல்ல முடியாத நடிப்பு. ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர் , மாஸ்டர் அஜய், பிரேம் கே சேஷாத்திரி உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் ஆகியோரின் இசை, ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலத்தின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
மொத்தத்தில், ‘சா வீ’ – ஒகே…!