விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ படத்தின் இயக்குநருக்கு கார் பரிசு!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு, இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.

சிறை படத்தின் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு,  பட  வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார், கார் ஒன்றை பரிசாக வழங்கி, பாராட்டினை தெரிவித்தார்.

இந்நிகழ்வில்..

நடிகை அனிஷ்மா பேசியதாவது..,

இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்‌ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார்.  நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு  சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது  அக்‌ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின்,  மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம்.  என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.

நடிகர் அக்‌ஷய் குமார் பேசியதாவது..,

எக்ஸாம் ஹாலுக்கு போனது போல் எல்லாம் மறந்து விட்டது. முதலில் பிலோமின் சாருக்கு நன்றி. அவர் மகனுக்குக் கூட இவ்வளவு செய்திருக்க மாட்டார். மாதேஷ் சாரும் அவர் டீமும் அவ்வளவு எனர்ஜியாக உழைப்பார்கள் அவர்களுக்கு நன்றி. ஜஸ்டின் சார் உங்கள் இசையில் நடித்தது மகிழ்ச்சி. சுரேஷ் சார், தமிழ் சார்,  எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க வைத்தீர்கள் எனத் தெரியவில்லை, நீங்கள் இது கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் எல்லாவற்றையும் சொல்லித் தந்தீர்கள் நன்றி. விக்ரம் பிரபு சார் என் முதல் ஷாட்டே உங்களுடன் தான். எனக்கு நிறைய நடிக்க கற்றுத் தந்தீர்கள். நன்றி. சூரி சார் என்னையும், அனிஷாவையும் வீட்டு வேலை செய், சமை என்றெல்லாம் சொன்னார் எதுக்குடா எனத் தோன்றியது, ஆனால் நடிக்கும் போது தான் புரிந்தது. நன்றி. அனிஷா எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் தமிழில் அறிமுக படம். வாழ்த்துக்கள். இறுதியாக அப்பா, கண்டிப்பான புரடியூசர். அவர் கண்டிப்பாக இருந்தது எனக்கு உதவியாக இருந்தது. என அம்மா மற்றும் குடும்பத்திற்கு நன்றி. கஷ்டமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துச் செய்தேன் எல்லோரும் உதவி செய்தார்கள் நன்றி.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார்.  மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி.  ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,

சிறை மிகவும் முக்கியமான படம். அக்‌ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம்.  எல்லோருக்கும் நன்றி.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர். இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.