‘பராசக்தி’ – விமர்சனம்!

சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக வெளி வந்திருக்கிறது, பராசக்தி. இந்தித் திணிப்பிற்கு எதிராக, தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டத்தின் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, தனது கற்பனைகளை கலந்து, எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் சுதா கொங்கரா. இத்திரைப்படத்தினை, ‘Dawn Pictures’ நிறுவனம் சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்க, ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அதர்வா முரளி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஶ்ரீலீலா, நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சேத்தன், குலப்புள்ளி லீலா, பிருத்விராஜன், காளிவெங்கட், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை, ஜி.வி.பிரகாஷ்.  ஒளிப்பதிவு, ரவி.கே.சந்திரன்.

ஈழத்து சிவானந்த அடிகளால் முதன்முறையாக இந்தி திணிப்பு போராட்டம் துவங்கப்பட்டது. அதன் பிறகு, இந்தித்திணிப்பை எதிர்த்து போராடிய அமைப்புகளில், மாணவர்களின் அமைப்பே மிக வீரியமாக ஈடுபட்டது. மாணவர்களின் தீவிரமான இந்தி எதிர்ப்பால் அரசியல் கட்சிகள் அதை முன்னெடுக்க வேண்டிய கட்டாய சூழலும் உருவானது.

மாணவர்களின் மிகத்தீவிரமான போரட்டம் உருவானதற்கு காரணம். இனிமேல், ஆங்கிலம் இல்லை. அதற்கு பதிலாக, இந்தி மட்டுமே. என இந்திய அரசால் பிரகடணப் படுத்த மேற்கொண்ட முயற்சியும், இந்தி நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, அரசு வேலை என்ற நிலையும் இருந்தது தான்.

இந்த, இந்தித் திணிப்புப் போராட்ட களத்தில் நடந்தது என்ன? என்பதை கற்பனைகளோடு கலந்து சுவாரசியப்படுத்திக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் சுதா கொங்கரா.

சிவகார்த்திகேயன் , அதர்வா இருவரும் சகோதரர்கள். இவர்களது வீட்டின் எதிர்வீட்டில் வசித்து வருபவர் ஶ்ரீலீலா, தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். சிவகார்த்திகேயன், இந்தித் திணிப்புக்கு எதிராக செயல்படும் ‘புறநானூறு என்ற அமைப்பின் தலைவர். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செயல்பட்டு வரும் சிவகார்த்திகேயனை, ஶ்ரீலீலா காதலித்து வருகிறார். கல்லூரி படித்து வரும் அதர்வாவும் இந்தி திணிப்பு போராட்டத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டில், இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டம் தீவிராமாகியிருந்த சமயத்தில், அதை ஒடுக்குவதற்காக இந்திய அரசால் நேரடியாக நியமிக்கப்படுகிறார், போலீஸ் அதிகாரி மோகன்ரவி. அவர்,  மாணவர்களுக்கு எதிராக செயல்படும் அரசின் நடவடிக்கைகளை பற்றி தகவல் கொடுக்கும் ஶ்ரீலீலாவை பின் தொடர்ந்து, புறநானூறு என்ற அமைப்பின் தலைவர் சிவகார்த்திகேயனை கைது செய்ய திட்டமிடுகிறார்.

அதைத்தொடர்ந்து, போராட்டம் மிகத்தீவிரமாக செயல்பட்டுவரும் நிலையில், பொள்ளாச்சியில் கூடும் புறநானூறு அமைப்பை சேர்ந்தவர்களையும், சிவகார்த்திகேயனையும் கொன்று குவிக்க திட்டமிடுகிறார், மோகன்ரவி. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், பராசக்தி படத்தின் கதை.

செழியன் என்ற கதாபாத்திரத்தில், நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் மிக இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார். திறமைகள் இருந்தும், நேர்முகத்தேர்வில் இந்தி திணிப்பால், வேலை பறிபோகும் சூழலில் அதிகாரிகளிடம் கெஞ்சுவதும், அதன்பிறகு வெகுண்டெழுந்து குண்டு வீசும் காட்சிகளிலும், ஶ்ரீலீலாவுடனான காதல்காட்சிகளிலும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினால் அசரவைத்து விடுகிறார். தம்பி அதர்வாவிடம் பாசம் காட்டும் காட்சிகளில், அவரை பிரியும் தருவாயில் கண்களில் நீர்க்கசியச்செய்கிறார். ரவிமோகனுடனான சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

ரவிமோகன், வில்லன் கதாபாத்திரத்தில் டெரராக நடித்திருக்கிறார். போராட்டத்தை அடக்கும் கொடூரமிக்க அதிகாரியாக, வசனங்களின்றி, கண் பார்வைகளிலேயே பயமுறுத்துகிறார். மாணவர்கள் போராட்டக்களத்தில் நடந்து கொள்ளும் விதம், ‘படுபாதக அரக்கனா இருக்கானே’ என பலரும் திட்டும் வண்ணம் இருக்கிறது. அதிலும் அதர்வாவிடம் நடந்து கொள்ளும் காட்சி, படம் பார்ப்பவர்களிடத்தில் கோபத்தை உருவாக்கி விடும். நேர்த்தியான நடிப்பு.

சிவகார்த்திகேயனின் தம்பியாக அதர்வா. போராட்டக்களத்தில் சீறிப்பய்வதும், அண்ணுடன் சண்டையிட்டு கொள்வதும் என இதுவரை அவர் படத்தில் நடித்திராத பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்.

ஶ்ரீலீலா, எலெக்ட்ரானிக்ஸ் படித்த தெலுங்குப் பெண்ணாக, போரட்டக்காரர்களுக்கு உதவுபவராக, சிவகார்த்திகேயனை காதலிப்பவராக, அதர்வாவுடன் இணைந்து போராடுபவராக என சிறப்பான நடிப்பினை வழங்கியிருக்கிறார். காதல் காட்சிகளில் இனிமை. அவரது கதாபாத்திரம் திரைக்கதையோடு பயணிப்பது சிறப்பு.

இந்தி திணிப்புக்கு எதிரான மற்ற மாநிலத்து போராட்டக்காரர்களாக ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப், தனஜெயா ஆகியோரும் கவனம் ஈர்க்கும்படி நடித்துள்ளனர்.

அறிஞர் அண்ணா கதாபாத்திரத்திற்கு கச்சிதாமக பொருந்தியிருக்கிறார், சேத்தன். இரண்டே காட்சிகள் என்றாலும் தனது நடிப்பினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குரு சோமசுந்தரம், குலப்புள்ளி லீலா, பிருத்விராஜன், காளிவெங்கட் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் படத்திற்கான பெரும் பலமாக இருக்கிறது.

உணர்ச்சிகரமான வசனங்களும், காட்சிகளும், பிரச்சாரத்தனமில்லாமல் வெகுஜன சினிமாவாக இருக்கிறது. அதோடு, மாணவர்களின் இந்தித்திணிப்பிற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டமும் சிறப்பாகவே படமாக்கப்பட்டிருக்கிறது.

‘பரசாக்தி’ – இந்தித்திணிப்பை எதிர்த்து, தொடர்ந்து போராடும் படைப்பாக இருக்கும்!