‘மாயபிம்பம்’ – விமர்சனம்!

ஆகாஷ், ஜானகி, ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘மாயபிம்பம்’. இத்திரைப்படத்தை, Selfstart Productions நிறுவனம் சார்பில், கே ஜே சுரேந்தர் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், நந்தா.

நாயகியின் ஆத்மார்த்தமான காதலை காமமாக பார்க்கும் நாயகனால், நாயகியின் வாழ்க்கையும், நாயகியின் வாழ்க்கையும் பறிபோகிறது. இதுவே மாயபிம்பம்.

ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். நாயகன் ஆகாஷ், மருத்துவக் கல்லூரி மாணவர். கடலூரில் வசிக்கும் அவர், சிதம்பரத்தில் உள்ள கல்லூரிக்கு அரசு பஸ்ஸில் சென்று வருகிறார். ஒரு நாள் சாலை விபத்தில் சிக்கி, நாயகி ஜானகி வேலை பார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழ்நிலையில், ஆகாஷூக்கும் ஜானகிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஆகாஷின் நண்பர், அது காதல் இல்லை என்றும், ஜானகி, ஆகாஷிடம் காமத்துக்காகவே பழகுவதாக சொல்ல, ஆகாஷும் நம்புகிறார். ஒரு நாள் ஆகாஷ், ஜானகியிடம் தனது இச்சையை வெளிப்படுத்த முயலுகிறார். இதை தெரிந்து கொள்ளும் ஜானகி, ஆகாஷிடம் இருந்து விலகுகிறார். அதன் பிறகு காதலையும், காமத்தையும் குழப்பிக்கொள்ளும் ஆகாஷூக்கு உண்மை தெரிய வருகிறது. அதோடு அவர் சொன்ன ஒரு பொய், இருவரது வாழ்க்கையிலும் இகப்பெரிய சோகத்தை உருவாக்குகிறது. அது என்ன என்பதே, ‘மாயபிம்பம்’  படத்தின் கதை.

இப்படத்தில் நடித்த ஒரு சிலரைத்தவிர, அனைவரும் புதுமுகங்களே. இருந்த போதும் மிகச்சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். மிக இயல்பான நடிப்பினை கொடுத்து அசர வைக்கின்றனர். ஜானகி அழுத்தமான கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆகாஷிடம் தனது காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் மிகச்சிறப்பான நடிப்பு. நண்பனது அறையில் ஆகாஷ் தன்னிடம் அத்து மீறும் தருணத்தில், தனது பார்வையினால் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, அபாரம்.

ஆகாஷூம் நடிப்பில் குறைவைக்கவில்லை. ஜானகி, தன் மீது கொண்டிருக்கும் காதலை நினைத்து கலங்கும் காட்சிகளிலும், வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் பேசாதது குறித்து, நண்பனிடம் கவலை கொள்ளும் போதும் பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார்.

ஆகாஷின் நண்பர்களாக நடித்திருப்பவர்களில் கேபிள் கனெக்‌ஷன் உரிமையாளராக நடித்திருப்பவர் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் அவர் அடிக்கும் லூட்டியினால், நேரம் போனது தெரியவில்லை. மற்ற நண்பர்களும் அந்தந்த கதாபாத்திரத்தில் பளிச்சிடுகின்றனர். இவர்களைப் போலவே ஆகாஷின் அப்பா, அம்மா, அண்ணன் என நடித்த குடும்ப உறுப்பினர்கள் கூட நன்றாகவே நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு, கதைக்கேற்றபடி அமைந்திருக்கிறது.  இசையமைப்பாளர் நந்தாவின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. ‘டெப்போவில நுழையாத பஸ்ஸே இல்ல..’ பாடல் இளைஞர்களை எளிதில் கவரும்.

எழுதி இயக்கியிருக்கும் கே.ஜே.சுரேந்தர், அழுத்தமான காதல் கதையை, ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. ஒருவரைப்பற்றி தெரிந்து கொள்ளாமலேயே அவர் மீது நாம் கொண்டிருக்கும் தவறான எண்ணம் எத்தைகைய கொடுமையானது. என்பதை, காதல் வழியாக ஜாலியாக, எமோஷனலாக சொல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார், இயக்குநர் கே.ஜே.சுரேந்தர். ஒரு சில குறைகள் இருந்தாலும், அவரை தாராளமாக பாராட்டலாம்.