குகன் சக்கரவர்த்தி, அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம் , வாசு விக்ரம் உள்ளிட்டோரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், வங்காள விரிகுடா. இதில் நாயகனாக நடித்திருக்கும் குகன் சக்கரவர்த்தி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை என கிட்டத்தட்ட 21 திரைப்பட ஆக்கத் தொழிநுட்பங்களையும் கையாண்டிருக்கிறார். இதற்காகவே இவருக்கு தனியாக பாராட்டுவிழா நடத்த வேண்டும்.
தூத்துக்குடியின் செல்வாக்குமிக்க பெரும்புள்ளி நாயகன் குகன் சக்கரவர்த்தி. அனைவருக்கும் உதவும் தாராள குணம் கொண்டவர். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக்கேட்கத் தயங்காதவர். ஆனால் சொந்த வாழ்க்கை சோகமாக இருக்கிறது.
ஒரு நாள் கடற்கரை ஓரமாக அமர்ந்திருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அந்த சூழலில் இருந்து காப்பாற்றுவதோடு, அவருக்காக ஒருவரை கொலை செய்கிறார். காதலியையும் அரவணைக்கிறார். இந்த சூழலில், கொலை செய்யப்பட்ட நபர் அவரது காதலியை மிரட்டுகிறார். குழப்பமடையும் குகன் சக்கரவர்த்தி, அதன் பிறகு என்ன செய்தார். என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, திரை முழுவதையும் ஆக்கிரமித்து கொள்கிறார். ஏழைகளுக்கு உதவும் வள்ளலாக, தவறுகளை அதிரடியாக தட்டிக்கேட்பது, காதலியிடம் உருகுவது என ஒரே படத்தில் அத்துனை கதாபாத்திரங்களையும் வெளிப்படுத்துகிறார். இரண்டு நாயகிகளிடமும் ஆடிப்பாடுவதோடு, அவர்களுக்கு நடிக்கவும் வாய்ப்பினை கொடுத்திருக்கிறார்.
பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் மிக்க நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது. ஏகப்பட்ட புதுமுகங்களும் அவ்வப்போது தலைகாட்டிவிட்டு செல்கின்றனர். திரை, மற்றும் அரசியல் பிரபலங்களை பற்றிய பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை தயாரிப்பு என அனைத்தையும் இழுத்துப்போட்டு வேலை செய்திருக்கிறார். பரவாயில்லை என சொல்லும் அளவில் இருக்கிறது. இந்த ஒரு படத்தில் அவரது மொத்த சினிமா கனவையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தி , சுமாரான சஸ்பென்ஸ் திரில்லர் டிராமா திரைப்படத்தை கொடுத்திருக்கிறார், குகன் சக்கரவர்த்தி.