மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
திரையிசையுலகில் 25வது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காதல் ரீசெட் ரிப்பீட் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இயக்குநர் பாலா பேசுகையில்,
” இயக்குநர் விஜய் தான் எனக்கு குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்து குரு இயக்குநர் விஜய் தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று பங்கெடுப்பது அவன் தான். தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
‘மதயானை கூட்டம்’ படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மனதில் நினைத்ததை கண்களிலேயே காட்டி இருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்கு தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா தான். அதற்கடுத்து நீங்கள் தான்( விஜி சந்திரசேகர்) . உங்களை நான் இந்த விழாவில் நேரில் சந்தித்ததற்கு நன்றி.” என்றார்.
இயக்குநர் விஜய் பேசுகையில்,
” முதலில் இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் சொன்னது மிகப்பெரிய வார்த்தை. அப்படி எல்லாம் இல்லை. உங்களுடைய படங்களை பார்த்து, அந்த பாதிப்பில் தான் நாங்கள் வந்திருக்கிறோம். உங்களுடைய படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கலைஞரிடம் இருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் கற்றுக் கொண்டோம். நீங்கள் இங்கு வந்து படக் குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களுடன் தொடர்பில் இருப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்து, அவர்களை சந்தித்த பிறகு பணியாற்றலாம் என்று சொன்னேன். அதன் பிறகு இந்த கதையை சொன்னவுடன் அதை நம்பி எனக்கு வாய்ப்பளித்தற்கும் நன்றி.
மாலி அண்ட் மான்வி புரொடக்ஷன்ஸ் போன்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை. நான் ஏன் அதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால்.. என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு சென்று இருக்கிறோம். ஜியா சங்கருக்கு விசா கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு சென்று விட்டோம். ஜியா மட்டும் இல்லை. வேறு யாரையாவது தேர்வு செய்து நடிக்க வைக்கலாமா..! என்ற சலனமும் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளரிடம் நாங்கள் இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். என்ன செய்யலாம்? என ஆலோசனை கேட்டேன். அப்போது அவர்,’ உங்களுக்கு எது நல்லது என்று மனதில் தோன்றுகிறதோ.. அதை செய்யுங்கள்’ என சொன்னார். அவர் அன்று சொன்ன ஒரு வார்த்தை தான் இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாகி இருப்பதற்கு காரணம்.
இது போன்றதொரு கன்டென்ட்டை.. புது முகங்களை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஒரு லெஜெண்டுடன் பணியாற்றும் போது நல்லதொரு தயாரிப்பாளர் தேவை. அதன் பிறகும் இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில சிக்கல்கள் எழுந்தது. அப்போதும் தயாரிப்பாளர்கள் என்னுடன் இருந்து ஆதரவு அளித்தனர். நான் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
நடிகர் மதும்கேஷ்- கடும் உழைப்பாளி. சித்தார்த் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து தன்னை அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டார். இதற்காக ஆபரேஷன் செய்து… உடல் எடையை குறைத்து…என பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய உழைப்பிற்கு இந்த படம் நல்லதொரு பலனை வழங்கும் என நான் நம்புகிறேன்.
அர்ஜுன் அசோகன்- தமிழுக்குத்தான் அறிமுகமே தவிர இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்த படத்திற்கு அவரும் ஒரு பில்லர். அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஜியா சங்கர் – மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தும் போது எதை உணர்ந்தேனோ.. அதேபோல்தான் ஜியா சங்கரை அறிமுகப்படுத்தும் போதும் இருந்தது. அவரை வைத்து முதல் காட்சியை படமாக்கும் போது அவரிடம் நீங்கள் தமிழ் சினிமாவில் நெடுநாள் பணியாற்றுவீர்கள் என சொன்னேன். இப்போது சொல்கிறேன். அவர் இந்திய சினிமாவில் பணியாற்றி நல்ல இடத்தை தொடுவார். ஜியா – மராட்டிய பெண் கடும் உழைப்பாளி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நான் சிங்கிள் ஷாட்டில் எடுத்தேன். அந்த காட்சியில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு நாட்கள் வரை பயிற்சியில் ஈடுபட்டார்.
விஜி சந்திரசேகர்- நீங்கள் இந்தப் படத்தில் ‘கேமியோ’ கிடையாது. நல்லதொரு கதாபாத்திரம் தான். படத்தை பாருங்கள்.
எம் எஸ் பாஸ்கர் – இந்தக் கதையில் ஹீரோவுக்கும் அர்ஜுன் அசோகனுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு எம் எஸ் பாஸ்கர் கேரக்டருக்கும் இருக்கிறது. பாஸ்கர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் என்பதை கடந்து.. அவர் இந்திய சினிமாவின் பெருமிதம். இந்தப் படத்திற்காக அவர் 40 நாட்கள் பணியாற்றினார் அதற்காக அவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் கதையை என்னுடன் இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளரான ஆர். மகாதேவ் இணைந்து எழுதினார். அவர்தான் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பின் இந்த கதை ஒரு மியூசிக்கல் கதை. இதை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் உருவாக்க முடியாது . இதனால் முதலில் தயாரிப்பாளரிடம் ஹாரிஸ் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவருடன் நாங்கள் பணியாற்றுவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய பாடம்.
அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரு படமாக பார்க்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். இந்தப் படத்திற்கு அவரும் மிகப்பெரிய பில்லர். படத்தின் பின்னணி இசைக்காக பல மாதங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகளை பற்றி எழுத தொடங்கும் போது இது சூப்பர் ஹிட் என எழுத முடியாது ஆனால் அதை நம்ப வைப்பது படத்தின் பணிகள் நடைபெறும் தருணங்கள் தான். இந்த தருணங்களை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் செய்து இருக்கிறோம். இதற்கான பலனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன். ஹாரிஸ் ஜெயராஜின் 25 ஆவது ஆண்டில் அவருடன் இணைந்து நாங்களும் பயணித்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை. இதற்கு அவருக்கு நன்றி.
பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப் படத்தில் பாடல்களை தாண்டி அவருடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. நா முத்துக்குமாருக்கு பிறகு இவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற… பயணப்பட… விரும்புகிறேன்.
இன்றைக்கு ஒரு படத்திற்கு பிரமோஷன் என்பது மிகவும் அவசியம் என நினைக்கிறேன். நான் வாழ்க்கையில் இரண்டு விசயங்களை செய்வேன். ஒன்று வழி நடத்துவேன். இல்லையென்றால் பின்பற்றுவேன். இந்தப் படத்தின் பிரமோஷன் குழுவினரை நான் பின்பற்றினேன். அவர்கள் அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.
இந்த பிரமோஷனில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நடிகராகவும் மாறி இருக்கிறார். அதை நான் மிகவும் ரசித்தேன். அவரை இயக்க முடியவில்லையே..! என்ற இன்ப அதிர்ச்சியும் எனக்கு இருந்தது.
நாம் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். சில படங்கள் மட்டும் தான் ஸ்பெஷலாக இருக்கும் அந்த வகையில் இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் எனக்கு ஸ்பெஷல் ஆனது. ஏனெனில் அதற்காக அமைந்த குழு. இந்தப் படத்திற்காக இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி
இது ஒரு சாதாரண மனிதனின் கதை. ஹீரோ என்பது யார்? உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. அதை நாம் முதலில் நம்ப வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை பார்த்தோ.. அழகை பார்த்தோ.. ஏற்கப்படுவதில்லை. ஒருவருடைய மனதை பார்த்து தான் ரசிக்கிறோம். அதுதான் ஹீரோ என நினைக்கிறேன். அப்படி ஒரு நல்ல மனம் கொண்டவனின் கதை தான் இது. இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என்றார்.