ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன. இத்திரைப்படம், ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
நீளிரா திரைபடத்தின் இயக்குநர் சோமிதரன் பேசுகையில்,
“சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை கேட்க முடியாதா…! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்- நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.
இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.
நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது. இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.
நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி… அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் ‘நீளிரா’.
நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி… அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி… குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.

போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல. போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.
இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா. அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.
நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.
லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.
எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும். அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.
போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.
இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் ‘உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.’ என சொன்னார். இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.
நடிகர் நவீன் சந்திரா பேசுகையில்,
இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.
படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.