இந்தியாவில் நடந்த 7 உண்மை சம்பவங்கள் தான், ‘மிஸ்டர் எக்ஸ்’! – இயக்குநர் மனு ஆனந்த்!

மிஸ்டர் எக்ஸ், திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதி ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாக இருக்கும் நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது,

‘என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் போது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கும். ஆனால் ஆர்யா தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையால் ரொம்பவே தைரியமாக இருந்தார். அதனாலேயே அவருடன் நான் நடிக்கும் போது என்னை, நீ பண்ணு மச்சான் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது மற்றவர்கள் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் இனி எனது படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு அதைச் செய்வேன். மஞ்சு வாரியருக்கும் எனக்கும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது போன்று காட்சிகள் இல்லை என்பது தான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். கிட்டத்தட்ட 70% இது ஆக்சன் படம் என்பதால் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் அனைவருமே ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார்கள். சரத்குமார் சார் எனக்கு ஒரு அப்பா போலத்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என் உடல்வாகு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை எனக்கு வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் இசையமைப்பாளர் திபு அழகாக செதுக்கி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணுவார்களா என வேறு யாராவது இருந்தாலும் சந்தேகம் பட்டிருப்பார்கள். ஆனால் இயக்குநர மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோது கூட அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தினார்” என்று கூறினார்.

இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது,

“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம் தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படம் அல்ல. தமிழ் படம். அந்த ஒரு நோக்கத்தோடு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம் உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றிக் கார்டில் கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதை தான் இது.
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார். கௌதம் கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கடேஷ் ரொம்பவே ஆர்வமுடன் தனது பங்களிப்பைக் கொடுத்தார்.. இதில் பல நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார். அப்படி அவர் மூலமாக வந்தவர்தான் நடிகை அனகா. என்னிடம் கதை பற்றி அதிகமாக கேள்வி கேட்டு சாகடித்தவர் என்றால் அது அனகா தான். எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுல்யா ரவியை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மூலமாக அவரிடம் கதை சொல்ல சென்றபோது அவர் அந்த அரை மணி நேரத்தில் இந்த கதை குறித்து காட்டிய ஆர்வம், என்னிடம் எழுப்பிய கேள்விகள் எல்லாமே அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் தான் என எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்திற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு தேர்வு செய்தது என்றால் ரைசா வில்சனை தான். இதற்காக பல பேரை பார்த்திருந்தாலும் கடைசியாக ரைசா தான் உள்ளே வந்தார். அவருடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும் எனக்கு இருந்தது, அவருக்கு கதையை சொல்வதற்காக நான் அழைத்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று என் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார்,
இவர்கள் அனைவரையும் விட மஞ்சு வாரியரை இந்தப் படத்தில் கொண்டு வருவதற்குத் தான் எனக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் ஒருமுறையாவது அவரைப் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று தான் சென்றேன். கதையைக் கேட்டதும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள் என்றார். அதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னார். மீண்டும் அவரிடம் சென்று முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துக் காட்டினேன், அதுவரை அமர்ந்திருந்தவர் பின்னர் நடந்து கொண்டே கதையை கேட்க ஆரம்பித்தார், ஒருவேளை அவருக்கு கதையைக் கேட்டு தூக்கம் வருகிறதோ என்று கூட நான் நினைத்தேன், அதற்கேற்ற மாதிரி அவரும் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்றார், எனது குழுவினரிடம் கூட அவர் வருவாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறினேன். ஆனால் ஆச்சரியமாக ஒரு வாரத்திலேயே அவர் தான் நடிப்பதாக சம்மதித்தார்.

சரத்குமார் சார் எப்போதுமே யூத் தான் இப்படிப்பட்ட ஒருவரை எப்படி வேறு ஒரு லுக்கில் காட்டலாம் என்பது ஒரு சவால் தான். ராஜஸ்தானில் பாலைவனத்தில் நல்ல கொளுத்தும் வெயிலில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ரஷ்ய சண்டைக் கலைஞர்களை வைத்து சண்டைக் காட்சிகளைப் படமாக்கினோம். சரத் சார் ரொம்பவே கூலாக இருந்தார். அந்த சண்டைக் கலைஞர்கள் தான் ரொம்பவே அந்த சூழலுக்கு சிரமப்பட்டார்கள். அதனால் அவருடைய வயது என்பது ஒரு பொருட்டே அல்ல.
பிரசன்னா ரொம்பவே விறுவிறுப்பாக இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக பலர் இந்த படத்தை பார்த்தார்கள். அதில் பலரும் என்னிடம் சொன்னது திபுவின் இசை பிரம்மாதம் என்பதுதான். படத்தின் கடைசி முக்கால் மணி நேரத்தை நீங்கள் ரொம்பவே ரசித்து அனுபவிப்பீர்கள் என்றால் அதற்கு திபுவின் பின்னணி இசை தான் முக்கிய காரணமாக இருக்கும். ஒரு பயங்கரமான படம், இதுவரை நீங்கள் பார்த்திராத படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். துரந்தரை மிஞ்சிவிடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பைசா வசூல் கேரண்டி என்று உறுதியாக சொல்வேன்” என்று கூறினார்,

நாயகன் ஆர்யா பேசும்போது,

‘கதை கேட்கும்போது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இது இருக்கும் எனத் தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன் தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால் எங்களை நம்பி, படத்தின் கதையை நம்பி எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது தயாரிப்பாளர் லஷ்மன் தான், இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. அவரை மிஸ்டர் பர்ஃபெக்ட் என்று சொல்லலாம். இதன் கதையில் அவர் கடினமாக உழைத்து உள்ளார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம்.. ஆனால் ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். நாங்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தச் சென்றபோது கூட அந்த நாட்டு மக்களுடன் சென்று சகஜமாக அவர் பழகுவார்.. இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ்.. இந்த படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு நிறையவே உள்ளது. படத்தின் முதல் காப்பி பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதே எடிட்டர் பிரசன்னா தான். படத்தின் முதல் காப்பி பார்ப்பது அவர்தான். நான் இயக்குநரிடம் கேட்பேன் பிரசன்னா என்ன சொன்னார் ஓகே சொல்லிட்டாரா அந்த மாதிரி ஒரு சிறப்பான எடிட்டர் நமக்குத் தேவை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன் சார் தான். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இந்தப் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் கோ டைரக்டர் ஆகவும் வேலை செய்துள்ளார்.
எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன். கௌதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் படம் பார்த்து பிறகு கௌதமை தான் நிச்சயம் அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில் தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் மே மாத வெயிலிலும் அதை பெரிது படுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.

மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும் அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அனாகா ஆயிரம் கேள்வி கேட்பார். ரொமான்டிக் பாடலில் சிரியுங்கள் என்று சொன்னால் என் கேரக்டர் சிரிக்காதே சீரியஸாகத் தானே இருக்கும் என்று சொல்வார். நம்மையே இவ்வளவு கேள்வி கேட்கிறார் நாம் சரியாகத்தான் பண்ணுகிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்.’ என்று கூறினார்.