பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா – திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் சுப்பிரமணியா சிவா,
“கவிதா பாரதி சொன்ன அப்பா கதை எவ்ளோ அற்புதமான கதை! எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு. எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எங்கம்மா எப்பவும் ஒரு வெத்தலைப்பாக்கு பை வச்சிருப்பாங்க. அதுல எப்பவும் ஒரு பென்சில் வச்சிருப்பாங்க. அவங்களுக்கு 86 வயசாகுது. எனக்குத் தெரிஞ்சு இருபது, முப்பது வருஷமா பென்சில் வச்சிருக்காங்க. வெத்திலையை மாத்தும் பொழுதெல்லாம் பென்சிலைப் பத்திரமா எடுத்து பையில் திரும்ப வச்சுப்பாங்க. ‘ஏன் நீ பென்சில வச்சிருக்க?’ என ஒருநாள் கேட்டேன். ‘யப்பா, யாராச்சும் எழுதக் கேட்பாங்க இல்ல!’ என அதுக்கு அவங்க பதில் சொன்னாங்க. ‘ஏம்மா இதுவரைக்கும் எழுத யாராச்சும் கேட்டிருக்காங்களா?’ எனக் கேட்டாங்க. ‘இதுவரைக்கும் கேட்கலைப்பா’ எனச் சொன்னாங்க. அதுதான் அந்த பென்சலின் கதை. எனக்கு என்ன ஆர்வம்ன்னா, அந்தப் பென்சிலை எழுதக் கேட்கப் போகிற அந்த மனிதன் யார் அப்படிங்கிறது தான் என்னோட கேள்விய இன்னும் இருந்துட்டிருக்கு. அது ஏன் அப்படின்னு இன்னும் என்னால் புரிஞ்சுக்கவே முடில.
இதற்கு முன் ‘எழுதப்படாத முகங்கள்’ என்றொரு புத்தகம் போட்டிருக்கிறார். இப்போ ‘ஈரம் காயாத கதைகள்’. நான் முதலில், யாருக்கு சமர்ப்பணம் என்பதையும், என்னுரையையும் வாழ்த்துரையையும் படிப்பேன். என்னுரையில், தனது அம்மாவை உடனிருந்து பார்த்துக் கொண்ட சுமதி மயினி பற்றி எழுதும் போது, ‘எங்கம்ம சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையிலும் சுமதி மயினி பேரிருக்கும்’ எனச் சொல்றார். நீங்க எந்த நேரத்தில் சிறந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியுமென்றால், உடம்பு சரியில்லாத பொழுது கூட இருந்து பார்த்துபவர்களைத்தான் முக்கியமான நண்பனாகப் பார்க்க முடியும். மேலும் ஜெகன் கவிராஜ், எழுதறதுக்கு கரம் போதும், எழுத வைக்கிற வரம் என்று தன் மனைவியையும் பிள்ளைகளையும் சொல்கிறார். ஒரு முன்னுரையிலேயே, ஜெகனின் மனிதநேயமும் நன்றியுணர்வும் வெளிப்படுகிறது.
இந்நூலை சிறுகதை என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஜெகன் சந்தித்த மனிதர்கள் பற்றிய தொகுப்பு தான் இப்புத்தகம். சிறுகதையை விட, தான் சந்தித்த மனிதரிடம் இருக்கும்கதையை எழுதுபவனை உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளனாக மதிக்கிறேன். கதை என்பது கற்பனையில் வருவது. ஆனால் இன்னொரு மனிதனிடம் இருக்கும் அனுபவம், அவன் இறந்துவிட்டால் அவனோட போய்விடும். எழுதப் படிக்கத் தெரியாத என் அப்பாம்மாவிடம் இருக்கும் கதைகளை நான் உள்வாங்கிக்கணும் அல்லது எழுதணும். அப்ப இன்னொரு சாமானிய மனிதனிடம் இருக்கும் கதைகளை அனுபவங்களை உள்வாங்கி எவன் படைப்பாகத் தருகிறானோ அவன் இந்தச் சமுதாயத்துக்கு மிக முக்கியமானவன். அப்படியொரு புத்தகம்தான் ஜெகன் கவிராஜின் இந்த ஈரம் காயாத கதைகள் எனும் புத்தகம். ஜெகன் கவிராஜ் இதில் எதையும் மிகைப்படுத்திச் சொல்லாமல், மிக எளிமையாக வட்டார வழக்கில் சொல்லியுள்ளார். ஜெகன் இது போல் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்” என்றார்.

நிவாஸ் கே.பிரசன்னா பேசுகையில்,
“என் சொந்த ஊர் திருநெல்வேலிதான். ஜெகன் கவிராஜ் எனக்கு எப்படிப் பழக்கம்ன்னா, ‘மை டியர் சிஸ்டர்’ எனும் பத்திற்கு நான் மியூசிக் பண்ணேன். அப்படத்தில் அவர் நடிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம், ‘ஜெகன்னு ஒருத்தர் இருக்கிறார். நல்லா எழுதுவார்’ எனச் சொன்னார். மியூசிக் டைரக்டர்ஸ் நாங்க எப்பவும் ஒரு பாடலாசிரியரோடு கம்ஃபர்ட் ஜோன் எதிர்பார்ப்போம். டக்குன்னு புதுசா ஒருத்தங்களிடம் மாறும்போது ஒரு சின்ன தயக்கம் இருக்கும். அதனால் நான் கொஞ்சம் தயங்கினேன். ‘இல்ல, நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க’ என்றார் பிரபு ஜெயராம். ‘அப்படியா!’ என ஃபோனில் ஜெகனுக்கு ஒரு சந்தம் கொடுத்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் முழுப் பாடல் எழுதிக் கொடுத்துட்டார். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஆரம்பித்து. பின் நிறையப் பேச ஆரம்பிச்சோம். ஆன்மிகம் பேசுவோம். அவரிடம் ஒரு நகைச்சுவைத்தன்மை இருக்கும். ஜெகனிடம் ஒரு ரிதம் இருப்பது தெரிய வந்தது. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் ஒரு ரிதம் இருக்கு. கம்போசர்ஸா எனக்கொரு சைலன்ஸ் தேவை; ரைட்டர்ஸா அவங்க ஒரு பிளான்க் பேப்பர்ல இருந்து ஆரம்பிப்பாங்க. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் சோர்ஸ் ஒன்னுதான். அந்த ரிதம் எங்களைக் கனெக்ட் பண்ணுச்சு. தொடர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பிச்சோம். ஒவ்வொன்றும் நன்றாக வந்தது. தாய்க்கிழவி வரை எங்க ஜர்னி வந்து. இப்ப அடுத்தது ‘மக்கள் காவலன்’ படத்திலும் பாடல் எழுதிட்டிருக்கிறார். எங்க ஜர்னி ரொம்ப நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எப்பவும் அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அந்த எனர்ஜிதான் ஆர்ட்டாக மாறுகிறது என நம்புகிறேன். இந்தத் தொகுப்பில், ‘அப்பா தீபாவளி’ எனும் கதை படிச்சேன். எளிமையான மனிதர்கள் பற்றிய கதை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எளிமையாக உள்ளவர்களோடு பழகினால் நம்ம மைண்ட் பயங்கரமா ரெஃப்ரெஷ் ஆகும். ஜெகன் கவிராஜ் அந்த மாதிரியான ஒருத்தர். அவரிடம் எப்ப பேசினாலும், புது விஷயங்களுக்கு ஓப்பனா இருப்பார். ஜெகன் மென்மேலும் வளர்வார். அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநரும் நடிகருமான அமீர் பேசுகையில் ,
“தாரே ஜமீன் பர் படத்தில் வரும் சிறுவனின் இன்னொரு வெர்ஷன் தான் நான். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் வரும். இந்த மேடைக்கு வரக் காரணம் புத்தகம் அல்ல. அந்தப் புத்தகத்தை எழுதிய நபர்தான் காரணம். ஏன் அவருக்காக நான் வருகிறேன் என்றால், உடன்பிறந்த சகோதரி தொகுத்து வழங்கப் புத்தகத்தைப் பெற்றோர் இருவரும் வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இருக்கு இல்லையா, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சுட்டான் என்கிற தருணம் அது. தன்னை இந்தச் சமூகம் ஒத்துக் கொண்டதுன்னு சொல்ற இடம் இருக்கில்லையா, அதைத் தன் குடும்பத்தார்க்கு உணர்த்தும் இடமிருக்கில்லையா, இந்த மாதிரி யார் விழா எடுத்தாலும் அந்த விழாவிற்குப் போவது என் வழக்கம். காரணம் எனக்கு இப்படியொரு விழா நடக்கவே இல்லை. நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய எந்தப் படத்திற்கும் வெற்றி விழா நடந்ததில்லை. என் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என் குடும்பத்தினர் வந்ததில்லை. அதனால் தான் யாராவது தன் உறவுகளோடு, ஒரு ஆளாகியிருக்கிறேன் என நிற்கும்பொழுது பக்கத்தில் நிற்க வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன். இதை விட பெரிய வெற்றி என்ன ஒரு மனிதன் அடைந்து விட முடியும்? ஜெகன் கவிராஜின் பெற்றோர் சென்னைக்கு வந்து முதல் முறையாக இப்படியொரு அரங்கில் மகனைப் பார்க்கிறார்கள் என்றால், இதுதான் ஒரு மனிதன் அடைந்த உயரம்.
திருநெல்வேலி பக்கத்தில் பூலாங்குளம் எனும் கிராமத்தில், டீக்கடையும் விவசாயமும் பார்த்த பெற்றோர்கள் ஆறாவதோடு படிப்பை நிறுத்தி பீடி பிடித்துக் கொண்டிருந்த ஜெகன், ஏதோ ஒரு மில்லில் போய் வேலை பார்க்க, பதினாறு வயசில் இப்படியிருந்தா கெட்டுப் போயிடுவான்னு உறவினர்கள் சேர்ந்து காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க. காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரத்திலும், பின் கேரளாவுக்குப் போய் மண்ணு சுமக்கிற வேலை பார்த்திருக்கார். திருச்சியில தெரு தெருவாகப் போய் பாத்திர வியாபாரம் பார்க்கிறார். பழைய புத்தகக் கடையில் எடைக்குப் புத்தகம் போடுவாங்க இல்ல, அதுல வர்ற புத்தகங்களைப் படிச்சு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் தான் இவரை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு. அதன் பின், ஏக இறைவனை வழிபடும் முற்போக்கான சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் கொண்ட அய்யா வழில நுழைகிறார். சென்னைக்கு வந்து வெற்றிவேந்தன் ஆஃபீஸ்ல வேலை செய்து, அவங்க கம்பெனி எடுத்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் கடைசி அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து, அந்த கம்பெனியிலேயே கேஷியராக வேலை பார்த்து, அதன் பின் பாட்டெழுதி, அப்புறம் மீடியாவிற்குள் வந்து, அப்புறம் ‘ஜீரக பிரியாணி’ பாடல், தாய்க்கிழவி படத்தில் பாட்டெழுதி, இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படத்துக்குப் பாட்டு எழுதி, ஒரு புத்தகம் எழுதி சென்னையில் பெரிய வெளியீட்டு விழா நடத்துறார். இந்த மாதிரியான ஆட்களைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெகனின் சிந்தனைக்கும், எண்ணத்துக்கும், அவர் சந்தித்த மனிதர்களையும், அவரது வட்டாரக் கதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.