‘கட்டா குஸ்தி 2’ ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ் மற்றும் காளி வெங்கட், முனீஷ் காந்த் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம், கட்டா குஸ்தி 2. இயக்கியிருக்கிறார், செல்ல அய்யாவு. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. கடந்த 2022-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தையும், குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் படக்குழு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றனர்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் செல்ல அய்யாவு கூறியிருப்பதாவது..,

‘’‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் கதைக்களம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இருக்கும். இதில் நாயகன் வீரா மற்றும் குஸ்தி வீராங்கனை கீர்த்தி ஆகியோருக்கு இடையே நடக்கும் புதிய குடும்பச் சிக்கல்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம், பள்ளி செல்லும் குழந்தையின் பெற்றோர்களான இவர்களில், நாயகி கீர்த்தி வேலைக்கு சென்றுவர, நாயகன் வீரா வீட்டில் இருந்து கொண்டு சமையல் செய்வது, மார்க்கெட் செல்வது, குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார். இதனால், இது மற்ற குடியிருப்பு வாசிகளான கணவன்மார்கள் இவரை எப்படியாவது வேலைக்கு அனுப்ப திட்டமிடுகின்றனர். அதே சமயத்தில் நாயகியை குஸ்தியில் பங்கு பெற்று வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார், நாயகன். இவை அனைத்தும், இன்ன பிற விஷயங்களும் படம் பார்ப்பவர்கள் ரசித்து, மகிழும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. க்ளைமாக்ஸில் குஸ்தி வீரராக களமிறங்குகிறார், நாயகன்.  முதல் பகுதியைப்போலவே ‘கட்டா குஸ்தி 2’  திரைப்படமும் அனைவருக்கும் பிடிக்கும்.’’ என்றார்.

குடும்பமாக ரசிகர்கள் படம் பார்க்க வருவதால் புகை பிடிப்பதை போன்ற காட்சி, உள்ளிட்ட சில காட்சிகளை நீக்கியுள்ளனராம், படக்குழுவினர். இந்த படமும் பெரும்பான்மையான மக்களால் ரசிக்கப்பட்டு வெற்றியடையும் என்பதால், கட்டா குஸ்தி 2 திரைப்படத்தினை எதிர் நோக்கி திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் காத்திருக்கின்றனர்.