சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை கொண்டாடும் மனதை வருடும் விளையாட்டு நாடகத் தொடர்.
முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு நாடகத் தொடரை ஜூன் 26 முதல் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஒரிஜினல் தொடர், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் விளையாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் அசாதாரண முயற்சிகளுக்கும் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலியாக உருவாகியுள்ளது.
சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு, பவித்ரன் படத்தொகுப்பு மற்றும் தமிழ்செல்வன் BFA கலை இயக்கத்தில் உருவாகியுள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், தமிழ்நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரத்தை வரையறுக்கும் உற்சாகம், உணர்வு மற்றும் தோழமையை அழகாகப் பதிவு செய்கிறது.
மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் தங்கள் ஹீரோவின் கடைசி போட்டியை நேரில் காண சென்னை நோக்கி மறக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு கனவுப் பயணமாக தொடங்கும் இந்த அனுபவம், விரைவில் நட்பு, உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய சாகசமாக மாறுகிறது. அந்தப் பயணத்தில், அவர்களின் உறுதியை சோதிக்கும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்வதோடு, இலக்கை விட பயணமே மறக்க முடியாததாக மாறக்கூடும் என்பதை உணர்கிறார்கள். நம்பிக்கை, சேர்ந்திருக்கும் உணர்வு மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் கிரிக்கெட் இணைக்கும் வலிமையான பிணைப்பை கொண்டாடுவதே மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் மையக்கருவாகும்.
மம்மட்டியான் ஸ்டார்ஸ் இயக்குநர் சவிர் சுதாகர் கூறுகையில்,
“தங்களின் ஹீரோக்கள் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் இந்த தொடர் ஒரு அஞ்சலி. கிரிக்கெட் இந்தக் கதையின் பின்னணியாக இருந்தாலும், மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் இதயம் நட்பு, லட்சியங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை வடிவமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களில்தான் உள்ளது. நேர்மையான, உணர்வுப்பூர்வமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த பயணத்தில் ZEE5 மூலம் பார்வையாளர்களும் இணையவிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.
நட்பு, உணர்வுகள், சாகசம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஒன்றிணையும் மறக்க முடியாத பயணமான மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஜூன் 26 முதல் ZEE5-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.