பிரபல ஸ்டாண்ட்-அப் காமடியனும் பிக் பாஸ் பிரபலமுமான விக்ககல்ஸ் விக்ரம் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்திற்கு ‘லைட்வெயிட், பேபி!’ (Lightweight, Baby!) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு, திட்டமிட்டபடி 45 நாட்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், நகைச்சுவை, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தனிமனித லட்சியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, உடற்பயிற்சி மற்றும் பாடிபில்டிங் (Competitive Fitness) உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு வித்தியாசமான காதல் பொழுதுபோக்குத் திரைப்படமாக (Romantic Entertainer) இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தின் மூலம் விக்ககல்ஸ் விக்ரம் முதல்முறையாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல், இத்திரைப்படத்திற்கான விறுவிறுப்பான வசனங்களையும் அவரே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக, உடற்பயிற்சி மற்றும் பாடிபில்டிங் துறையில் மிகவும் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தை கே.சி. குரு எழுதி இயக்க, ஹிதா ஸ்டுடியோஸ் (Hitha Studios) நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. சாகரா சந்தேஷ் இதன் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்ய, சரவணா சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குனர் கே.சி. குரு பேசுகையில்,
‘’கடந்த 45 நாட்களாகப் படப்பிடிப்பு நடத்தியது ஒரு அசாத்தியமான பயணம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். முற்றிலும் மாறுபட்ட உலகத்தைச் சேர்ந்த இரு மனிதர்களைப் பற்றிய ஒரு புதிய யோசனையாகத் தொடங்கிய இக்கதை, தற்போது தங்களை முழுமையாகப் பெருமைப்பட வைக்கும் ஒரு அழகான படைப்பாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக எடிட்டிங் அறையில் தங்களின் அடுத்தகட்ட சுவாரசியமான பயணம் தொடங்கவுள்ளதாகவும், இக்கதாபாத்திரங்களை விரைவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.’’
தொடர்ந்து பேசிய நாயகன் விக்ககல்ஸ் விக்ரம்,
‘’தனது திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருப்பது மிகவும் உற்சாகமான அனுபவம் என்றும், நடிப்புடன் சேர்த்து வசனம் எழுதியது இந்த நீண்ட பயணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்தக் குழுவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பக்கா காமெடி மற்றும் எமோஷனல் விருந்தாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உடற்பயிற்சி தனக்கு உடல் ரீதியான சவாலாக இருந்த நிலையில், நடிப்பு தன்னை உணர்வுபூர்வமாகப் புதிய கோணத்தில் செதுக்கியுள்ளதாகக் கதாநாயகி ஆரத்தி கிருஷ்ணா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தின் கண்ணைக் கவரும் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகும் என்றும், இவ்வாண்டின் இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.