அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி!

’ஒன்ஸ் மோர்’ (Once More) திரைப்படத்தின் பின்னணியில் தமிழ் சினிமாவின் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் களம் இறங்கியுள்ளனர். இத்திரைப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் தனது நேர்த்தியான கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அழகிய உலகைக் காட்டும் வகையில் ராஜ் கமல் கலை இயக்கத்தை (Art Direction) கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி கதாபாத்திரங்களை மிகவும் இளமையாகவும் அழகாகவும் வடிவமைத்துள்ளார். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ போன்ற தரமான வெற்றிப் படங்களை வழங்கித் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளார்.

முன்னதாக இத்திரைப்படத்தின் ஆவலைத் தூண்டும் வகையில் வெளியான டைட்டில் டீசர் மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாபின் மெலடி இசையில் வெளியான “இந்திரா”, “வா கண்ணம்மா” ஆகிய பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி, இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளன. இந்தத் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு படத்தின் மீதான ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் இன்னும் பலமடங்கு எகிற வைத்துள்ளது. அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணியின் எதார்த்தமான காதல், மாடல் அழகி சோனா ஒலிக்கலின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாபின் மயக்கும் இசை எனப் பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க முழுமையாகத் தயாராகியுள்ளது.