லார் கிப்பன் சர்ச்சை: விக்ரம் பகிர்ந்த வீடியோவின் பின்னணியில் இருக்கும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள்!
சமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சியான் விக்ரம், அரிய வகை மனிதக்குரங்கு குட்டி ஒன்றுடன் விளையாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது விலங்கு நல ஆர்வலர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்தியாவில் அரிய வனவிலங்குகளை வளர்ப்பதற்கான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் அவர் ஒரு சிறிய கிப்பன் குரங்கைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. வனத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் படம் விக்ரமின் மகளின் மாமனாரும், பிரபல கெவின்கேர் நிறுவனத்தின் தலைவருமான சி.கே. ரங்கநாதனுக்குச் சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது.
மேலும், அந்த வீடியோவில் இருந்தது இந்தியக் குரங்கு அல்ல என்பதும், அது தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டுச் சூழலைச் சேர்ந்த லார் கிப்பன் (Lar Gibbon) என்பதும் கண்டறியப்பட்டது. இந்த அரிய உயிரினம் முறையான சர்வதேச ஆவணங்கள் மற்றும் மத்திய அரசின் அனுமதியுடன் தான் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனவிலங்கு குற்றத்தடுத்துப் பிரிவு தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிப்பன்கள் என்பவை வாலில்லாத சிறிய வகை மனிதக்குரங்குகள் ஆகும். இவை தங்களின் கைகளை அசைத்து, மரத்திற்கு மரம் மிக வேகமாகத் தாவும் அரிய திறன் கொண்டவை. இவை இந்தியாவில் வடகிழக்கு மாநிலக் காடுகளில் மட்டுமே காணப்படும், இந்தியாவின் ஒரே மனிதக்குரங்கு இனமான ஹூலுக் கிப்பனும் (Hoolock Gibbon) ஒன்றாகும்.
உலகளவில் இதில் மூன்று வகைகள் இருந்தாலும் இந்தியாவில் மேற்கு ஹூலுக் கிப்பன் மட்டுமே வாழ்கிறது என மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதேசமயம் விக்ரம் விவகாரத்தில் சிக்கிய லார் கிப்பன்கள் (Lar Gibbons) என்பவை இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டு மனிதக்குரங்குகள் ஆகும். இவற்றின் கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் காணப்படுவதால் இவை வெள்ளைக்கைக் கிப்பன்கள் (White-cheeked Gibbon) என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் இத்தகைய வனவிலங்குகளை வீட்டில் அடைத்து வளர்ப்பதற்கு மிகக் கடுமையான சட்டத் தடைகள் உள்ளன. ஒரு தனிநபர் எவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தாலும், தன் சொந்த விருப்பத்திற்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ வீட்டில் இவற்றை வளர்க்க சட்டப்படி முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உள்நாட்டு ஹூலுக் கிப்பன் அட்டவணை ஒன்றிலும், வெளிநாட்டு லார் கிப்பன் அட்டவணை நான்கிலும் சேர்க்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், லார் கிப்பன்கள் உலகளவில் அழியும் விளிம்பில் உள்ளதால், சர்வதேச உடன்படிக்கையான சிட்டெஸ் (CITES) அமைப்பின் முதன்மை அட்டவணையில் வைக்கப்பட்டு அதன் சர்வதேச வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அல்லது மாநில வனத்துறையின் தலைமை வார்டன் (Chief Warden) மற்றும் மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign Trade – DGFT) ஆகிய அமைப்புகள், அறிவியல் ஆராய்ச்சி அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களுக்கு மட்டுமே இதற்கான சிறப்பு உரிமங்களை வழங்க முடியும் என்பதால் தனிநபர்களுக்கு எக்காரணம் கொண்டும் இந்த உரிமம் வழங்கப்படாது.
ஒருவேளை முறையான ஆவணங்கள் இன்றி, அனுமதியின்றி இத்தகைய பாதுகாக்கப்பட்ட விலங்குகளை வீட்டில் வளர்ப்பது நிரூபிக்கப்பட்டால் அது பிணையில் வரமுடியாத கடுமையான குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனையுடன் பெரிய தொகையிலான அபராதமும் விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு. லார் கிப்பன் போன்ற மனிதக்குரங்குகள் மனிதர்களுடன் கூண்டில் வாழும்போது கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
சென்னையில் ஒரு கிப்பன் குரங்கு ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் வனத்துறை விசாரித்து வருகிறது. விலங்குகள் என்பவை காடுகளின் சொத்துக்கள் என்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்கவும் இத்தகைய அரிய உயிரினங்களைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் ஆசையைத் தவிர்ப்பதே சமூகப் பொறுப்புள்ள மனிதர்களின் கடமையாகும்.