அர்மான் மாலிக் குரலில் உருக வைக்கும் ‘அருகே அருகே’ பாடல்! துல்கர் சல்மானின் ‘I Am Game’ புதிய சாதனை!
நடிகர் துல்கர் சல்மானின் திரையுலகப் பயணத்தில் பிரம்மாண்ட 40-வது மைல்கல் படமாக உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ (I Am Game) படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே’ (Arugey Arugey) தற்போது வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஜேக்ஸ் பிஜாயின் மயக்கும் மெல்லிசையில் உருவான இப்பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரபல பாடகர் அர்மான் மாலிக்கும், கன்னடத்தில் அனிருத் சுஸ்வரமும் பாடியுள்ளனர். மலையாளத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘RDX’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த மெகா பட்ஜெட் படம் இது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே பான்-இந்தியா லெவலில் எகிறிக் கிடக்கிறது. அதற்கு மேலும் தீ மூட்டும் வகையில், துல்கரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வேஃபரர் ஃபிலிம்ஸ்’ (Wayfarer Films) தனது முந்தைய ஹிட் படமான ‘லோகா’ (Lokah) வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை உலகத் தரத்தில் தயாரித்துள்ளது.
முன்னதாக ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர், ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘விக்ரம்’ பட புகழ் அன்பறிவ் மாஸ்டர்களின் சர்வதேச தரத்திலான சண்டைக் காட்சிகள், ஜிம்ஷி காலீத்தின் மிரட்டலான ஒளிப்பதிவு மற்றும் விறுவிறுப்பான சேசிங் சீக்வென்ஸ்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் இருக்கையின் நுனிக்கே வரவழைத்தது. தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட, ஒரு அதிநவீன ஸ்டைலிஷ் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது இருக்கும் என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஸ்டைலான, மாஸான தோற்றத்தில் தோன்றுகிறார். படத்தில் துல்கருடன் இணைந்து ஆண்டனி வர்கீஸ் (பெப்பே), இயக்குனர் மிஷ்கின், கதிர், கயாடு லோஹர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் என ஒரு பெரும் மாஸ் நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளதுடன், படத்தின் ஆடியோ உரிமத்தை முன்னணி நிறுவனமான ‘ஜீ மியூசிக்’ (Zee Music) கைப்பற்றியுள்ளது.
ஒரு தரமான ஃபேண்டஸி திரில்லர் அனுபவத்தை வழங்க சஜீல் பாபா, இஸ்மாயில் அபுபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதையையும்; ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் வசனங்களையும் எழுதியுள்ளனர். தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரத்தியேக இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, மலையாள திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகத் தயாராகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி, ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தியேட்டர்களில் துல்கர் சல்மானின் ஆட்டம் ஆரம்பம்!