இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள ‘DC’ (தேவதாஸ் சந்திரா) திரைப்படம், தமிழ் சினிமா வர்த்தக உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், தியேட்டர்களில் ரிலீஸான 4 நாட்களிலேயே போட்ட முதலீட்டை முழுமையாக மீட்டு அசுர லாபத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
சுமார் ₹25 கோடி என்ற மிகக் குறைந்த பட்ஜெட்டில், எந்தவொரு பெரிய மாஸ் ஹீரோக்களும் இல்லாமல், லோகேஷின் நடிப்பு மற்றும் அனிருத்தின் அதிரடியான பின்னணி இசையை மட்டுமே நம்பி இந்த படம் களமிறங்கியது. முதல் நாளில் ₹4.40 கோடியுடன் நிதானமாகத் தொடங்கிய படத்தின் வசூல், ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால் (Positive Word-of-Mouth) அடுத்தடுத்த நாட்களில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. சனிக்கிழமை ₹7.00 கோடி, ஞாயிற்றுக்கிழமை ₹9.55 கோடி என வார இறுதியில் கல்லா கட்டிய ‘DC’, திங்கட்கிழமையும் அசத்தலாக ₹5.70 கோடியை ஈட்டி மாஸ் காட்டியுள்ளது. இதனால் இந்தியாவில் மட்டும் படத்தின் நிகர வசூல் ₹26.70 கோடியைக் கடந்துள்ளது.
உலக அளவில் இந்திய மொத்த வசூல் ₹30.65 கோடி மற்றும் ஓவர்சீஸ் வசூல் ₹13.25 கோடி என மொத்தம் ₹43.90 கோடியை இப்படம் வாரிக்குவித்துள்ளது. தற்போது மிக எளிதாக ₹50 கோடி கிளப்பில் இணைய இப்படம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் வசூலித்த தொகையே படத்தின் பட்ஜெட்டைத் தாண்டிவிட்டதால், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் 4 நாட்களிலேயே ‘Safe Zone’ அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனமே டிஜிட்டல் ஓடிடி (Sun NXT) மற்றும் சாட்டிலைட் உரிமைகளைத் தன்வசம் வைத்துள்ளதால், தயாரிப்பாளர்களுக்கு 100%-க்கும் மேல் லாபம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. குறைந்த முதலீட்டில் எப்படி ஒரு மெகா ஹிட் படத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ‘DC’ திரைப்படம் மற்றுமொரு சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது.