ஹீரோயின் செட் ஆகல! நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் த்ருவ் விக்ரம் மோதல்!

நடிகர் விக்ரமின் மகனும், இளம் நட்சத்திரமுமான த்ருவ் விக்ரம், ‘நீலாத்ரி புரொடக்ஷன்ஸ்’ மற்றும் பாலிவுட்டின் ‘பென் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும்  தெலுங்கு – தமிழ் இருமொழித் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விலகியிருப்பது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாகத்  தயாரிப்பாளர்கள் சங்கம் வரை புகார் சென்றுள்ள நிலையில், த்ருவ் விக்ரம் இந்தத் திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கான முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இயக்குநராக ரமேஷ் வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், படத்தின் கதைக்களம், திரைக்கதை மற்றும் அதை உருவாக்கும் விதம் குறித்து த்ருவ் விக்ரமுக்கும் இயக்குநருக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. படத்தின் தரத்தை மேம்படுத்த இயக்குநரை மாற்ற வேண்டும் என்று த்ருவ் விக்ரம் தயாரிப்பு தரப்பிற்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சம்மதிக்காததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

கதை விவாதத்தைத் தாண்டி, படத்தில் த்ருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி (Female Lead) தேர்விலும் இருதரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. த்ருவ் விக்ரம்  பரிந்துரைத்த சில மாற்றங்களைத் தயாரிப்பு நிறுவனம் ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது.

அதன்பிறகு, படப்பிடிப்புக்கான தேதிகள் (Dates) கேட்கப்பட்ட போது, தனக்குக் கடுமையான முதுகு வலி (Back Pain) இருப்பதாகவும், அதனால் உடனடியாக சண்டைக் காட்சிகளில் (Action Scenes) நடிக்க முடியாது என்றும் த்ருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த நீலாத்ரி நிறுவனத்தின் படத்தை தள்ளிவைத்த த்ருவ் விக்ரம், திடீரென ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் மற்றொரு புதிய அதிரடிப் படத்தில் (DV4) நடிக்கத் தொடங்கினார். இதனால், த்ருவ் விக்ரம் முதுகு வலியை ஒரு சாக்காக மட்டுமே கூறியுள்ளார் என்று தயாரிப்பு தரப்பு கோபமடைந்துள்ளது.

த்ருவ் விக்ரமிற்கு சுமார் ₹1 கோடி முன்பணம் மற்றும் பல கோடிகள் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளுக்காக முதலீடு செய்துள்ள நீலாத்ரி புரொடக்ஷன்ஸ், த்ருவ் விக்ரம் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் (TFPC) புகார் அளித்துள்ளது. இதற்கிடையே தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை (SIFCC) இந்த விவகாரத்தில் தலையிட்டு, த்ருவ் விக்ரம் இந்தப் பிரச்னையை முடித்துத் தராமல் புதிய படங்களில் நடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதால், இந்த விவகாரம் டோலிவுட்டிலும், கோலிவிட்டிலும் பரபரப்பான செய்தியாக பரவி வருகிறது. இந்த பரபரப்புக்கிடையில், ‘நீலாத்ரி புரொடக்ஷன்ஸ்’ நாளை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்த இருக்கிறது.