ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் பாக்யராஜின் கடைசி படம்!

‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சாய் ரமணி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. எம்.பி.எம். எண்டர்டெயின்மென்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்கும் இத்திரைப்படம், காதல் மற்றும் நகைச்சுவை பின்னணியில், 1990-களில் தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதியான ஓசூரில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குறித்த பல முக்கிய மற்றும் உருக்கமான தகவல்களை இயக்குநர் சாய் ரமணி தற்போது பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இரு பெரும் ஆளுமைகளான கே. பாக்யராஜ் மற்றும் டி. ராஜேந்தர் ஆகியோர் தங்களது நீண்ட கால திரைப்பயணத்தில் முதன்முறையாக இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் கே. பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். இவர்களின் கூட்டணி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாக ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. மேலும் ஒரு நெகிழ்ச்சியான விஷயமாக, சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கே. பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து, இப்படத்தில் கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்.

பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு குறித்து இயக்குநர் சாய் ரமணி பேசுகையில்,

“பாக்யராஜ் சாரின் திடீர் மறைவு எங்களை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளன்று அவருக்கும், டி. ராஜேந்தர் சாருக்கும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினமே அவருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது மிகவும் கவலையாக இருந்தது” என்றார்.

மேலும், “அவர் தனது பகுதிகள் அனைத்தையும் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே மீதமிருந்தன. அவற்றை ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க உள்ளோம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் நடித்த கடைசி காட்சியை தற்போது வெளியிட்டுள்ளோம். படம் முழுவதும் நாயகனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் வருவார்” என்று குறிப்பிட்டார்.

புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா ஆகியோருடன் கர்நாடகாவைச் சேர்ந்த சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதுதவிர கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.

‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். சதீஷ் குமார் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.