லவ் ஃபெயிலியர் ஆன கடுப்பில் ஊரை விட்டு ஓடி, துபாயில் செட்டிலானவர் நம்ம ஹீரோ மருது (ரிஷிகாந்த்). ஐந்து வருடம் கழித்து ஜாலியாகச் சொந்த ஊருக்குத் திரும்பினால், அவருக்குத் தெரியாமலேயே வீட்டில் கல்யாண ஏற்பாடுகளைப் பக்கா பிளான் போட்டு முடித்துவிடுகிறார்கள். குடும்பத்தின் கட்டாயத்தால் வேறு வழியில்லாமல் திருமண மேடையில் ஏறி, அனிஷ்மா அனில்குமாரின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார்.
கதையின் அசல் கலாட்டாவே முதலிரவு அறையில்தான் ஆரம்பிக்கிறது. புது மாப்பிள்ளை கெத்தோடு, மனைவியிடம் நைசாகப் பேச்சுக் கொடுக்க முயல்கிறார் ஹீரோ. ஆனால், ஹீரோயினோ தாலி கட்டிய புருசனை அந்த அறையிலேயே லாக் செய்துவிட்டு, தன் பழைய காதலனுடன் எஸ்கேப் ஆக ப்ளான் போடுகிறார். இந்த அதிரடித் திருப்பம் ஹீரோவுக்குத் தெரியவரும் போது தியேட்டரில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. இதன் பிறகு ஹீரோ எடுத்த அதிரடி முடிவு என்ன? ஹீரோயினின் காதல் கைகூடியதா அல்லது ஹீரோவின் கல்யாண வாழ்க்கை ஜெயித்ததா? என்பதை செம்ம காமெடியாகவும், கிராமத்து எதார்த்தத்தோடும் சொல்கிறது இந்த ‘மொத ராத்திரி’.
கல்யாண வீட்டில் தொடங்கும் கதை, முதலிரவு அறையோடு முடிந்தாலும், அந்த இடைப்பட்ட சில மணி நேரத்திற்குள் மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாக அலசியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்புசாமி. காதல், மோதல், பாசம் என எல்லாவற்றையும் மேலோட்டமாக, ஜாலியான பாணியில் கையாண்டிருந்தாலும், அவை ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிகின்றன. வழக்கமான கமர்ஷியல் மசாலாத்தனங்களைத் தவிர்த்து, ஒரு நிஜமான கிராமத்துத் திருமண வீட்டிற்குள் நடக்கும் உறவுகளின் எதிர்பார்ப்புகளையும், எதார்த்தங்களையும் உண்மைக்கு மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்திப் பாராட்டுப் பெறுகிறார்.
தமிழ் சினிமாவில் புது ஹீரோக்களின் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஒரு நல்ல வரவாக வந்துள்ளார் ரிஷிகாந்த். ‘மருது’ என்ற எளிய கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில், பந்தா இல்லாத எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பல எமோஷனல் சீன்களில் அமைதியாக இருந்தே தனது முகபாவனைகள் மூலம் ஸ்கோர் செய்துள்ளார்.
ஹீரோயினாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வெயிட்டான கேரக்டரில் அசத்தியுள்ளார். ஃபர்ஸ்ட் ஹாஃபில் அமைதியாக இருக்கும் இவர், செகண்ட் ஹாஃப் முழுவதும் வசனங்களே பேசாமல் கண்களாலேயே வித்தை காட்டியுள்ளார். குறிப்பாக, கிளைமாக்ஸில் தன் மனக்குமுறல்களைக் கொட்டி அவர் அழும் சீன் அக்மார்க் கைதட்டல் பெறுகிறது. இவர்களுடன் நடித்துள்ள சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி, அப்துல் லீ மற்றும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் எனப் பெரிய பட்டாளமே தங்களை நடிகர்களாகக் காட்டாமல், நிஜமான கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்து படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதியின் கேமரா, ரசிகர்களை நேராக ஒரு கிராமத்துத் திருமண வீட்டிற்குள்ளேயே கூட்டிச் சென்று விடுகிறது. குறிப்பாக, இரவு நேர சீன்களை லைட்டிங் மூலம் மிக அழகாகக் கையாண்டு கவனம் ஈர்க்கிறார். பரத் சங்கரின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கமர்ஷியல் குத்துப்பாட்டாக இல்லாமல், கதையின் ஓட்டத்திற்கும் கேரக்டர்களின் உணர்வுகளுக்கும் ஸ்பீட் பிரேக்கர் இல்லாமல் சப்போர்ட் செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும், குழப்பம் இல்லாமல் ஏகப்பட்ட கேரக்டர்களை நேர்த்தியாகத் தொகுத்து கதையின் இயல்பு மாறாமல் எடிட் செய்துள்ளார் எடிட்டர் அசோக் அர்ஜுனன்.
‘மொத ராத்திரி’ என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ டபுள் மீனிங் டயலாக் நிறைந்த படம் என்று தியேட்டருக்குப் போகாமல் இருந்துவிடாதீர்கள். டைட்டில் மட்டும்தான் ஒரு மாதிரி இருக்கிறதே தவிர, படம் அக்மார்க் குடும்பங்கள் உட்பட அனைத்து தரப்பு ஆடியன்ஸும் சிரித்து ரசிக்கக்கூடிய கிராமத்து எண்டர்டெய்னர்!