6 மணி டெட்லைனும் மொரட்டு சிங்கிளின் கல்யாண கனவும்… ‘ராம் அன்ட் லீலா’ விமர்சனம்!

“முப்பது வயதாகியும் இன்னும் மொரட்டு சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருக்கிறோமே” என்று கல்யாணத்திற்காக ஏங்கித் தவிக்கும் ராம் (ரியோ). இந்தச் சூழலில், பேரழகி லீலா (வர்டிகா) திடீரென இவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். “அடடா.. நமக்கு லக் அடித்துவிட்டது” என்று ராம் குதிப்பதற்குள், லீலா ஒரு விசித்திரமான ரூல்ஸ் போடுகிறார். “மாலை 6 மணிக்கு மேல் நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன், அதனால் 6 மணிக்கு மேல் என்னைச் சந்திக்கக் கூடாது” என்று கறாராகக் கூறிவிடுகிறார். லீலாவின் அழகில் மயங்கியிருக்கும் ராமும், “காதலுக்கு இதெல்லாம் சகஜமப்பா” என்று அந்த கண்டிஷனை ஓகே செய்து லவ்வை கன்டினியூ செய்கிறார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்த ‘மாலை 6 மணி’ டெட்லைன் ராமின் வாழ்க்கையில் ஏகப்பட்ட லோக்கல் சிக்கல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. பொறுமையிழந்த ராம், இந்த 6 மணி நிபந்தனைக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை எப்படியாவது கண்டுபிடித்தே தீருவது என்று துப்பறியக் கிளம்புகிறார்.

‘சின்னதம்பி’ கவுண்டமணி போல லீலாவிற்கு ஒருவேளை மாலைக்கண் நோய் இருக்குமோ என்று ராமும், தியேட்டரில் இருக்கும் ஆடியன்ஸும் கணிக்க, அங்கேதான் இயக்குநர் ஒரு செம்ம ட்விஸ்ட் வைக்கிறார். நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு அரிய பிரச்சினை லீலாவுக்கு இருப்பது தெரியவருகிறது. அந்த ரகசியம் என்ன? அது தெரிந்த பிறகும் ராம் காதலித்தாரா? இவர்களது திருமணம் எப்படி ஜாலி கலாட்டாவாக முடிந்தது? என்பதை நகைச்சுவையோடு சொல்கிறது இந்த ‘ராம் அன்ட் லீலா’.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன் கண்ணன், எந்த ஹாலிவுட் அல்லது ஆங்கிலப் படத்தைப் பார்த்து இந்த ஐடியாவைச் சுட்டார் என்று தெரியவில்லை. (ஏனென்றால், இதே போன்றதொரு மையக்கருவோடு சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு தமிழ்ப் படம் ரிலீஸானது). அப்படி சுட்ட கதையாக இருந்தாலும், அதைத் தமிழ் நடுத்தரக் குடும்பப் பின்னணியில், நம் ஊர் ஆடியன்ஸுக்கு ஏற்ப பக்கா லோக்கல் காமெடியாகக் கொடுத்ததில் இயக்குநர் சிக்ஸர் அடித்துள்ளார்.

நமது யூகங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் நாயகியின் அந்த விசித்திரமான பிரச்சினை, கதையை விறுவிறுப்பாக நகர்த்தப் பெரிதும் உதவியுள்ளது. ரகசியம் தெரிந்த பிறகு காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் சிக்கல்களையும், இறுதிக்கட்டக் கல்யாணக் காட்சிகளையும் ஒரு பக்கா காமெடி எண்டர்டெய்னராகக் கையாண்டு, படத்தில் ஆங்காங்கே இருக்கும் லாஜிக் குறைகளை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் மறக்கடித்துள்ளார்.

கல்யாணத்திற்காக ஏங்கும் ராம் கேரக்டரில் ரியோ நடித்துள்ளார். படம் முழுக்க காமெடி கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தனக்குள் இருக்கும் ஒரு புதிய லோக்கல் நாயகனைக் காட்ட முயற்சி செய்துள்ளார். பெண்கள் உலகம் பற்றி எதுவுமே தெரியாத ஒரு பக்கா அப்பாவியாக வலம் வரும் ரியோ, தனது உடல்மொழி மற்றும் டைமிங் டயலாக்குகள் மூலம் தியேட்டரைச் சிரிக்க வைக்கிறார். அவரது சில்மிஷங்களும், லூட்டிகளும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கால திரைப்படங்களை அப்பட்டமாக நினைவூட்டுகின்றன. இருப்பினும், ஒரு சில எமோஷனல் சீன்களில் அவரது நடிப்பு சற்று ஓவர் டோஸாகத் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

நாயகி வர்டிகா ஒவ்வொரு ஃபிரேமிலும் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். கனமான கதாபாத்திரம் என்றாலும், ஹீரோவுக்கு இணையாக இவருக்குத் திறமையை வெளிப்படுத்தப் பெரிய அளவில் வாய்ப்புகள் தரப்படவில்லை. இவரை ஒரு அழகான சிலையாகக் திரையில் காட்டுவதற்கே இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

இவர்களுடன் ராமின் அப்பாவாக சேத்தன், அம்மாவாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக வரும் முனீஷ்காந்த், நண்பனாக வரும் பாலாஜி தியாகராஜன், நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட், மாமனாக வரும் மாகாபா ஆனந்த் மற்றும் தாத்தாவாக வரும் காத்தாடி ராமமூர்த்தி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே தங்களது வழக்கமான டைமிங் காமெடியால் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுனின் கேமரா ஒட்டுமொத்தப் படத்தையும் செம்ம கலர்ஃபுல்லாகவும், பளிச்சென்றும் காட்டியுள்ளது. குறிப்பாக, புதுமுக நாயகியைப் பளிச்சென்று திரையில் கொண்டு வர அவர் அசாத்தியமாக மெனக்கெட்டுள்ளார்.

அன்கிட் மேனனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணிக்கும் மாண்டேஜ் பாடல்களாகவே வருகின்றன. அவை திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் மெலோடிகளாக இருப்பதோடு, தற்போதைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களுக்குப் பக்காவாகப் பொருந்தும் வகையில் ட்ரெண்டியாக அமைந்துள்ளன. அவரது மென்மையான பின்னணி இசையும் இதமாகப் பயணிக்கிறது. படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா முதல் பாதியைச் சற்று மெதுவாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதியை விவேகமாக நகர்த்தி, நகைச்சுவைக் காட்சிகளைச் சரியான முறையில் தொகுத்துப் படத்தை கலகலப்பாகக் கொண்டு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், செகண்ட் ஹாஃபில் பிக்-அப் ஆகும் ‘ராம் அன்ட் லீலா’, லாஜிக் விஷயங்களைச் சற்று தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால், வார இறுதியில் குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே ஜாலியாகச் சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்குத் திரைப்படமாகும்!