‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களின் அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ (Toxic). இத்திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 26, 2026) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இதன் இறுதி விளம்பரப் பணிகளுக்காகப் படக்குழுவினர் சென்னையில் களம் இறங்கியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் விளம்பர நிகழ்வுகளை நடத்தி வரும் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர், நேற்று தமிழக ரசிகர்களை நேரடியாகச் சந்தித்துத் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) பிரம்மாண்டமான முன்வெளியீட்டு விழாவை நடத்தினர்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென முற்றிலும் ஒரு இருண்ட, அடர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான புதிய உலகத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம் (Art Direction), கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட (Multi-layered) சுவாரசியமான கதாபாத்திரங்கள் என, இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இதன் டிரெய்லர் மூலம் தெளிவாகத் தெரிய வருகிறது. அதிரடி ஆக்ஷன், இருண்ட கேங்ஸ்டர் உலகம், ஆழமான குடும்ப உறவுகள், அதிர்ச்சி தரும் துரோகங்கள் மற்றும் அரசியல் அதிகாரப் போட்டி எனப் பல்வேறு விறுவிறுப்பான வணிக அம்சங்களை ஒன்றிணைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமாக, இத்திரைப்படம் ஆங்கிலம் (English) மற்றும் கன்னடம் (Kannada) ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் நேரடியாகப் படமாக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் மிக நேர்த்தியாக டப்பிங் செய்யப்பட்டு உலகெங்கும் வெளியாகிறது. இதன் மூலம் யாஷின் வழக்கமான ரசிகர் வட்டத்தைத் தாண்டி, இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் இப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வரவேற்பைப் பெறும் எனத் திரையுலக வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.
விழா மேடையில் தோன்றிய நாயகன் யாஷ் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியதாவது:
“என் அன்பிற்குரிய தமிழ் மக்களே, நீங்கள் எப்போதும் எனக்கு அளவில்லாத தூய்மையான அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ திரைப்படத்தில் நான் நடித்தபோது நீங்கள் எனக்கு அளித்த அன்பு அளப்பரியது. அப்போதே என்னை உங்களது சொந்த வீட்டுப் பிள்ளையாக அன்புடன் வரவேற்றீர்கள்; தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில், நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சாரின் ‘ஜனநாயகன்’ (Jananayagan) திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் மிகவும் வேதனையான ஒரு தருணமாக இருந்தது. ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் தமிழக மக்கள் தங்களது அசாத்திய ஆதரவை வழங்கிப் படத்தைக் கொண்டாடினீர்கள். நீங்கள் காட்டும் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது; விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் எப்போதும் அப்படித்தான் இருக்கும்.
தமிழக ரசிகர்கள் சினிமாவை மிகவும் நேர்த்தியான நல்ல முறையில் அணுகுகிறீர்கள்.இந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் என்பது முழுக்க முழுக்க ஆர்வம், வேட்கை மற்றும் உணர்வுகளைப் பற்றிய ஒரு கதையாகும். இது ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் உலகத்தைக் காட்டப் போகிறது; இப்படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சினிமா விருந்தாக இருக்கும். சினிமா என்பது கன்னடம், தமிழ், தெலுங்கு என்று தனித்தனியாகப் பிரிந்தது அல்ல; அது ஒட்டுமொத்த இந்திய சினிமா. அந்த வகையில் இத்திரைப்படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய மாஸ் அனுபவத்தைத் தரும்” என்றார்.
இவ்விழாவில் படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸ் பேசியதாவது:
“எனக்கு 4 வயதாக இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். எனது முதல் படத்தை நான் இயக்கி முடித்தபோது, என்னால் இரண்டாவது ஒரு படத்தை இயக்க முடியும் என்று திரையுலகில் யாரும் நம்பவில்லை. அதே போன்ற ஒரு அவநம்பிக்கை நிலைதான் என் திரையுலகப் பயணத்தில் தொடர்ந்து நீடித்தது. ஆனால், இப்போது ஒட்டுமொத்த இந்தியாவின் மிகப்பெரிய மாஸ் நட்சத்திரமாக விளங்கும் யாஷ் சார் என் திறமை மீது முழு நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் தாராளமாக இக்கதையைச் செய்யுங்கள், நான் இருக்கிறேன்’ என்று எனக்குப் பக்கபலமாக நின்றார்.
இப்படத்தின் விவாதங்களின் போது, தமிழ் சினிமாவில் காதலின் அடையாளமாகத் திகழும் மாஸ் திரைப்படங்களான ‘படையப்பா’ உள்ளிட்ட பல கமர்சியல் திரைப்படங்களை எனக்கு மிகச்சிறந்த ரெஃபரன்ஸாக (Reference) யாஷ் சார் காட்டினார். கமர்சியல் ஆளுமை கொண்ட ஒரு மாஸ் ஹீரோவை எப்படித் தனித்துவமாகக் காட்ட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கண்டிப்பாக இந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத யாஷின் ஒரு புதிய ‘2.0 வெர்ஷனாக’ (Yash 2.0) இருக்கப் போகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன்:
“இந்த மாபெரும் மேடையில் நிற்பது எனக்கு மிகப்பெரிய பெருமையாகும் . நடிகர் யாஷ் சார் நான் எப்போதும் வியந்து ரசிக்கும் ஒரு உலகளாவிய ஐகான் (Icon). முதலில் இத்திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்புதான் எனக்குக் கிடைத்தது. பின்னர் எனது வரிகள் பிடித்துப்போகவே, அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கி, மொத்தமாக இப்படத்தில் மூன்று முக்கியப் பாடல்களை எழுதும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கினர். யாஷ் சாருக்கு இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த டாக்ஸிக் திரைப்படத்தின் மூலம் அவரது உலகளாவிய புகழ் இன்னும் பல மடங்கு பிரம்மாண்டமாக உயரும் என்று நான் ஆழமாக நம்புகிறேன்.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் சார், நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சாரின் ‘ஜனநாயகன்’ (Jananayagan) திரைப்படத்தைத் தயாரிக்கும் போது பல்வேறு சவால்களையும், ஆன்லைன் கசிவு உள்ளிட்ட பல போராட்டங்களையும் எதிர்கொண்டார். அப்போதெல்லாம் அவர் மிகவும் உறுதியுடன் நின்று வென்றார்; தமிழக மக்கள் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். அதேபோல், இயக்குநர் கீது மோகன்தாஸ் மேம் எனக்குக் குடும்ப நண்பர் போன்றவர். இத்தகைய ஒரு பிரம்மாண்ட கேங்ஸ்டர் உலகத்தை உருவாக்க உங்களிடம் இருந்த தைரியமும், துணிச்சலும் அளப்பரியது; இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இத்திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கியக் காரணியாக இதன் அசாத்திய நட்சத்திரப் பட்டாளம் அமைந்துள்ளது. இப்படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷுடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள குடும்ப உறவுகள், பாசப் பிணைப்புகள் மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் அதிகார மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை ஒரு உலகத்தரம் வாய்ந்த கேங்ஸ்டர் எபிக் (Gangster Epic) படமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகிய முன்னணி நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள இத்திரைப்படம் நாளை ஆகஸ்ட் 26, 2026 முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மிக பிரம்மாண்டமாகத் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
“இது தனி மொழிக்கானது அல்ல, இந்திய சினிமா!”: சென்னை ‘டாக்ஸிக்’ விழாவில் மாண்புமிகு விஜய் சாரின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!