லவ், ஃபிரண்ட்ஷிப், கலாட்டா! சேயோன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ஜென்-ஸி படம்!

திரைத்துறையில் வளர்ந்து வரும் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான “பெஸ்டி பிக்சர்ஸ்” (Bestie Pictures), இன்றைய இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலான புதிய திரைப்படத் தயாரிப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளது. சமகால இளைஞர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் வண்ணமயமான கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று (ஆகஸ்ட் 24, 2026) சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் சிறப்புப் பூஜையுடன் மிகவும் உற்சாகமாகத் தொடங்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் முக்கியக் கிரியேட்டிவ் கூட்டணியாகத் தயாரிப்பாளர் டாக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சீயோன் ராஜா ஆகியோர் இணைந்துள்ளனர்.கதை, வசனம் மற்றும் தயாரிப்பு, டாக்டர் எஸ். கார்த்திகேயன். திரைக்கதை மற்றும் இயக்கம் சீயோன் ராஜா.

இயக்குநர் சீயோன் ராஜாவின் முந்தைய படைப்பான ‘பொதுநலன்கருதி’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சமூகவிரோதி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது முற்றிலும் ஒரு புதிய வண்ணத்தில் இந்த ‘ஜென்-ஸி’ (Gen-Z) குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படத்தை அவர் கையில் எடுத்துள்ளார். டாக்டர் எஸ். கார்த்திகேயனின் ஆழமான கதை மற்றும் வசனத்திற்கு, மிகவும் சுவாரசியமான முறையில் வேகம் நிறைந்த திரைக்கதையை வடிவமைத்து அவர் இயக்கி வருகிறார்.

ஒரு பக்கம் இளமைத் துடிப்பு, மறுபக்கம் குடும்ப உறவுகள், நடுவில் ஆழமான காதலும் நட்பும் என அனைத்தையும் சுற்றி அமையவிருக்கும் செம நகைச்சுவைக் கலாட்டாவை மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது. நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் சாதாரண நிகழ்வுகள் யாவும், சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாகத் திரும்பும் போது எப்படி ஒரு மாபெரும் நகைச்சுவையாக மாறுகிறது என்பதை இப்படம் விவரிக்கிறது.

இத்திரைப்படத்தில் புத்துணர்ச்சியான இளம் காம்போவாக ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முக்கியக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில், கதாநாயகனின் தந்தையாகப் பிரபல மூத்த கலைஞர் ரமேஷ் கண்ணா மற்றும் தாயாகப் ‘பருத்திவீரன்’ புகழ் நடிகை சுஜாதா நடிக்கின்றனர்.

இப்படத்தின் கூடுதல் பலமாகத் தமிழ் சினிமாவின் மாபெரும் அதிரடி நகைச்சுவைக் கூட்டணி இணைந்துள்ளது. அதன்படி, அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து உள்ளிட்ட பல முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இளம் நடிகர்களின் அசாத்திய எனர்ஜிக்கும், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் அக்மார்க் காமெடி டைமிங்கிற்கும் இடையேயான இந்த அசத்தல் காம்போ, கதையின் கலாட்டாவை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இளமைத் துடிப்பு நிறைந்த காட்சி அமைப்புகள், கலகலப்பான சூழல்கள் மற்றும் முத்திரைப் பாடல்கள் என ரசிகர்களுக்கு ஒரு ரசனையான திரை அனுபவத்தை வழங்க அசத்தலான தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர். சிரிக்கலாம், ரசிக்கலாம், ஃபீல் பண்ணலாம் மற்றும் ஒட்டுமொத்தக் குடும்பத்தோடு தியேட்டரில் கொண்டாடலாம் என்ற  நோக்கத்தோடு இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் அடுத்தடுத்த விறுவிறுப்பான அப்டேட்களும், படத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகி, சினிமா ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் வகையில் படக்குழுவினர் தற்போது முழுமையான ‘ஃபன் மோடில்’ (Fun mode) பரபரப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.