கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர். சந்துரு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பில் உருவாகியுள்ள, ஒட்டுமொத்தத் தென்னிந்தியத் திரையுலகிலும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள குடும்பத் திரைப்படம் ‘ஃபாதர்’ (Father). தந்தை மற்றும் மகன் இடையேயான ஆழமான, பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உன்னதமான பாச உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இச்சூழலில், இப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் வணிக மதிப்பின் மீதுள்ள அசாத்திய நம்பிக்கையால், பிரபல விநியோக நிறுவனமான மேசிஸ் புரொடக்ஷன்ஸ் (Macis Productions) இத்திரைப்படத்தின் உலகளாவிய தியேட்டர் விநியோக உரிமையைப் (Theatrical Distribution Rights) பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராஜ்மோகன் விவரிக்கும்போது,
“என்னைப் பொறுத்தவரை ‘ஃபாதர்’ ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பொறுப்பு, அக்கறை, கண்டிப்பு அல்லது அவர்கள் செய்யும் தியாகங்கள் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வுகளை ஒரு மகன் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் போகலாம். அன்பால் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தத் தெரியாத இரண்டு மனிதர்களின் பயணம்தான் இந்தப் படம். டீசருக்குக் கிடைத்துள்ள நேர்மறையான வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் டீசர் என்பது ஒரு சிறிய பார்வை மட்டுமே. ‘ஃபாதர்’ படத்தின் முழுமையான பயணம் இன்னும் வலுவான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர். சந்துரு பேசுகையில்,
” ‘ஃபாதர்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். தந்தை – மகன் உறவு மிகவும் தனித்துவமானது. அவர்களுக்குள் அன்பு, எதிர்பார்ப்புகள், புரிதலின்மை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்களை இணைப்பது ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு. இந்தக் கதை மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்பினேன். மிகுந்த நேர்மையுடனும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். முழுத் திரைப்படம் அவர்களுக்கு இன்னும் ஆழமான எமோஷனல் அனுபவத்தை வழங்கும். ஒரு கதை பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் உணர வைத்தால், அது அவர்களுடன் நீண்ட காலம் பயணிக்கும். ‘ஃபாதர்’ படத்திலும் அந்த பலத்தை நான் பார்க்கிறேன்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் புத்துணர்ச்சியான இளம் காம்போவாக டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்துள்ளார். அவருக்கு இணையாகப் பன்முகத் திறமை கொண்ட பிரகாஷ் ராஜ் அசாத்தியமான ஆழத்தையும் உணர்வையும் கொண்டு வந்துள்ளார். டீசரில் இடம்பெற்றுள்ள அவரது கூர்மையான பார்வை, தந்தைக்கே உரிய முகபாவனைகள் மற்றும் நடிப்பில் வெளிப்படும் தத்ரூபமான உணர்வுகள் படத்தின் மையக் கதைக்கு அசுர பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன. இவர்களது காம்போ திரையரங்குகளில் ஒரு மிகப்பெரிய எமோஷனல் மேஜிக்கை நிகழ்த்தும் எனத் திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.