கோலிவுட்டின் மெகா கூட்டணி… தரமணியில் அரங்கேறிய சஸ்பென்ஸ் சந்திப்பு!

அசுர வேகத்தில் நகரும் ‘அரசன்’ ஷூட்டிங்!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிலம்பரசன் டிஆர் (STR) கதாநாயகனாக நடிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’ (Arasan). ஒட்டுமொத்த இந்தியச் சினிமா வட்டாரங்களிலும் அசுர எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள அரசன் திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் மிக விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தரமணியில் (Taramani) உள்ள திரைப்பட நகரில், கலை இயக்குநரின் மேற்பார்வையில் பல கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமான குடியிருப்பு அரங்கம் (Set) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தற்பொழுது விறுவிறுப்பான முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. எவ்விதத் தொய்வும் இன்றி, முன்கூட்டியே திட்டமிட்டபடி அசுர வேகத்தில் படப்பிடிப்புப் பணிகள் தினசரி முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தயாரிப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘அரசன்’ படப்பிடிப்புத் தளத்தில் ஒரு சுவாரசியமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. படத்தின் நாயகன் சிலம்பரசன் டிஆர், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ஆகிய மூவரும் படப்பிடிப்பு இடைவேளையின் போது நேரில் சந்தித்துள்ளனர்.இப்படத்தின் அடுத்தகட்ட மியூசிக் கம்போசிங் பணிகள் மற்றும் பாடல்களின் பின்னணி குறித்து இம்மூவரும் தீவிரமாகக் கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் பல்லாண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த மெகா கூட்டணி தற்பொழுது ‘அரசன்’ படத்தில் இணைந்து வேலை செய்வது, படத்தின் வணிக மதிப்பையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே, இது இயக்குநர் வெற்றிமாறனின் புகழ்பெற்ற ‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் (Vada Chennai Universe) தொடர்புடைய ஒரு பிரத்யேகக் கதைக்களத்தில் உருவாகி வருகிறது என்பதுதான்.அடிமட்ட அரசியல் மற்றும் கேங்ஸ்டர் வாழ்வியலைப் பேசும் இப்படத்தில், சிலம்பரசன் டிஆருடன் இணைந்து முந்தைய பாகத்தில் நடித்த முன்னணி நடிகர்களான ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பல அசாத்திய திறமைமிகு நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எஸ்டிஆர் – வெற்றிமாறன் – அனிருத் என்ற இந்த அசுர கூட்டணி இணைந்துள்ளதே ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சினிமா விருந்தாக அமைந்துள்ள நிலையில், ‘அரசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். எனப் படக்குழுவினர் தற்பொழுது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.