‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய கமல்ஹாசன்!
Kamal Haasan Praises Bhavana Studios' 'Bethlehem Family Unit'!
பிரபல தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது தமிழில் டப் செய்யப்பட்டுத் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு புதிய ரசிகர் வட்டாரத்தை உருவாக்கித் தீவிரமாகப் பரவி வருகிறது. இத்தகையச் சூழலில், உலகநாயகன் கமல்ஹாசன் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைத் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துக் கூறியுள்ளது கோலிவுட் மற்றும் மாலிவுட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்தச் சிறப்புச் சந்திப்பின் போது, படத்தின் சுவாரசியமான திரை வடிவமைப்பு, நுணுக்கமான மேக்கிங் உத்திகள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவின் அசாத்திய உழைப்பைப் பாராட்டிய உலகநாயகன், அவர்களின் இந்த முயற்சிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவானிடம் இருந்து கிடைத்த இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகள், ஒட்டுமொத்தப் படக்குழுவினர் மத்தியிலும் எல்லையற்ற உற்சாகத்தையும் பேரானந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், படத்தின் முன்னணி நடிகர்களான ஃபகத் பாசில், திலீஷ் போத்தன், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் நடிகை உன்னிமாயா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர். உலகநாயகனுடனான இந்த உரையாடலும் சந்திப்பும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரது வாழ்விலும் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.