‘என்ன விலை’, நந்தா படத்திற்குப் பிறகு மனதிற்கு நெருக்கமான படம்! கருணாஸ் நெகிழ்ச்சி!
"My Wife Praised My Acting for the First Time in 20 Years!" - Karunas Gets Emotional on Stage!
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ள இத்திரைப்படம், பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 13 உயரிய விருதுகளை அள்ளிக்குவித்த பெருமையுடன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் தங்களது நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் தர்ஷன்,
தான், இத்திரைப்படத்தில் ஒரு எழுத்தாளர் (Writer) கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் குறிப்பிட்டார். படம் அனுப்பப்பட்ட அனைத்து சர்வதேச விருது விழாக்களிலும் இப்படம் மிக உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டிய ஒரு மிகச்சிறந்த வெற்றிப் படமாக இது அமையும் என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து பேசிய நடிகை நிரோஷா,
தனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். படப்பிடிப்பின் போது நடிப்பு என்பது தெரியாத அளவிற்கு, கதாபாத்திரத்தின் இயல்பான தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறி நெகிழ்ந்த அவர், தமிழ் ரசிகர்களின் ஆதரவு படத்திற்குத் தேவை என்றார்.
மக்களுடன் இணைந்து இப்படத்தைக் கொண்டாடக் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட நடிகர் கவி,
பல நாடுகளின் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இந்தத் திரைப்படம் விருதுகளை அள்ளிய பெருமையைக் கொண்டது. சர்வதேச அளவில் சாதித்த இந்தத் திரைப்படத்தை எப்போது நம் நாட்டுத் திரையரங்குகளில் நமது சொந்த மக்களுடன் சேர்ந்து பார்ப்போம் என்று ஆவலோடு காத்திருந்த தனக்கு, வரும் செப்டம்பர் 17 ரிலீஸ் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் பாண்டி,
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காகத் தாங்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருந்ததாகக் குறிப்பிட்டார். தனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். ‘பசங்க’ மற்றும் ‘கோலி சோடா’ ஆகிய தனது முந்தைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை எல்லாம் தாண்டி, மக்கள் மனதில் தனக்கு ஒரு மாபெரும் அடையாளத்தைத் தேடித்தரும் படமாக இது அமையும் என்று தான் பெரிதும் நம்புவதாகக் கூறினார்.
விழாவில் பேசிய நடிகை சாஷா,
இத்திரைப்படத்தில் கதாநாயகனின் தங்கை ‘மணிமேகலை’ என்ற மிக முக்கியமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு பக்கா கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் சினிமா கனவு இத்திரைப்படத்தின் மூலம் நனவாகி இருப்பதாக நெகிழ்ந்த அவர், ராமேஸ்வரத்தின் பின்னணியில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் மிகவும் கஷ்டப்பட்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார் .

படத்தின் நாயகன் கருணாஸ் பேசுகையில்,
“கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இயக்குநர் பாலா அண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ கதாபாத்திரத்தின் மூலம் எனது சினிமா பயணத்தைத் தொடங்கினேன். எனக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்கள் மீது தனி பிரியம் உண்டு. அதனால் மலையாள எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை எனக்குள் இருந்தது. எனது இருபது ஆண்டு கால அந்த ஆசையை இந்த ‘என்ன விலை’ திரைப்படம் நிறைவேற்றியுள்ளது” என்றார்.
தொடர்ந்து படத்தின் பின்னணி மற்றும் பட்ஜெட் குறித்துப் பேசிய கருணாஸ்,
“இத்திரைப்படம் முற்றிலும் சாமானிய மக்களைப் பற்றியது. அதனால்தான் இயக்குநர் மிகவும் இயல்பான நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். எனக்கு இன்று மார்க்கெட்டில் பெரிய வர்த்தகம் இல்லை என்றாலும், என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் இந்த ஒற்றைக் கதையை நம்பி ஏழு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்குக் கதையின் மீது அசாத்திய நம்பிக்கை இருந்தது. இந்தியத் திரைத்துறையில் இதுவரை எவருமே கேட்கத் துணியாத ஒரு மிக முக்கியமான கேள்வியை இயக்குநர் சஜீவ் பழூர் இத்திரைப்படத்தில் எழுப்பியுள்ளார்.
‘நந்தா’ படத்திற்குப் பிறகு எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இது அமைந்துள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.மேலும் சக கலைஞர்களின் நடிப்பு மற்றும் ஓடிடி வர்த்தகம் குறித்துப் பேசுகையில், “வழக்கறிஞர் (Advocate) கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் அசாத்தியமாக நடித்துள்ளாா்.
எல்லா பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் மிகத் திறமையாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே நெட்பிளிக்ஸ் (Netflix) போன்ற முன்னணி ஓடிடி தளம் இதன் டிஜிட்டல் உரிமையை வாங்கியிருப்பது ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளளது. இத்தனை ஆண்டுகால எனது சினிமா பயணத்தில், எனது நடிப்பைப் பார்த்துவிட்டு என் மனைவி முதன்முறையாகப் பாராட்டியது இந்தத் திரைப்படத்தில்தான். அதேபோல, படப்பிடிப்பில் எனது நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்த நடிகை நிமிஷாவும் நெகிழ்ந்து என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நிச்சயம் இந்தப் படமும், இதில் நான் செய்துள்ள கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.
இறுதியாக மேடையில் பேசிய தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர்,
தமிழ் சினிமா வரலாற்றில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற திரைப்படங்கள் எல்லாம் மிகவும் எளிய, சிறியதொரு கருவில் (Concept) இருந்து தொடங்கி மாபெரும் வெற்றிக் கதைகளாக உருவெடுத்தவை என்று குறிப்பிட்டார். தனக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழ் சினிமா மீதுள்ள அசாத்திய காதலின் காரணமாகவே தனது முதல் தமிழ்ப் படமாக இந்த ‘என்ன விலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்த அவர், ரசிகர்கள் அனைவரும் செப்டம்பர் 17 அன்று தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டுத் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றார்.