மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.
இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.
ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,
‘’பத்தா படத்தின் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.

சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.
இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.