கடந்த சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘சட்டமும் நீதியும் சீசன் 2’. ஒரு முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்கும் நேரத்திற்குள் (சுமார் 20 நிமிடங்களுக்கும் குறைவான 6 எபிசோடுகள்) ஒரு மர்மக் கொலை, மறுவிசாரணை, நீதிமன்ற வாதங்கள் மற்றும் இறுதித் தீர்ப்பு என அனைத்தையும் சற்றே இழுத்தடிப்புடன் முழுக்க முழுக்க சாட்சியங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் ஒரு கொலைக்கான மர்மத்தை அவிழ்க்கும் கோர்ட்ரூம் த்ரில்லராக இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் நடித்த பண நெருக்கடியில் இருக்கும் எளிய வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியின் (சரவணன்) தற்போதைய சூழ்நிலையிலிருந்து தொடங்குகிறது. ஒரு பண்ணை வீட்டு பார்ட்டியில் இன்ஸ்பெக்டர் கனகவேல் (பிரேம்குமார்) துப்பாக்கியால் சுடப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு போலீஸார் அதிரடியாகக் கைது செய்யப்படுகின்றனர். கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனைவியும், பார் கவுன்சில் தலைவருமான சந்திரா (வரலட்சுமி சரத்குமார்), அந்த நான்கு போலீஸாருக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக் கூடாது எனப் புறக்கணிப்புத் தீர்மானம் கொண்டுவந்து, அவரே நேரடியாக அரசுத் தரப்பு வழக்கறிஞராகக் களம் இறங்குகிறார். இந்தச் சூழலில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு காவலரின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, பார் கவுன்சில் எதிர்ப்பையும் மீறி அந்த நான்கு போலீஸாருக்காக வக்கீல் சுந்தரமூர்த்தி வாதாட முன்வருகிறார். கொலையாளி யார் என்பதை நீதிமன்ற அறை வாதங்களின் வழியே விளக்குகிறது மீதிக்கதை.
இத்தொடரின் ஆகச்சிறந்த பலம், நீதிமன்றத்தில் நடக்கும் கூர்மையான உரையாடல்களும் வாதங்களும்தான். ஒரு ஸ்மார்ட்வாட்ச்சின் இதயத்துடிப்புப் பதிவு (Heart-rate log), துப்பாக்கி சுடப்பட்ட தூரம் போன்ற தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு ஒவ்வொரு சாட்சியத்தின் போதும் சந்தேகம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுவது போன்று திரைக்கதையைச் சுவாரசியமாக நகர்த்தியுள்ளனர்.
ஏழை வழக்கறிஞராக வரும் நடிகர் சரவணன், நீதிமன்றக் காட்சிகளில் தனது எதார்த்தமான நடிப்பால் தொடரைத் தாங்கிப் பிடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் தனது பாத்திரத்திற்குத் தேவையான கம்பீரத்தையும் உறுதியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். கல்லுாரி வினோத், கவிதா பாரதி, ஆறுபாலா, பிரியங்கா ரோபோ சங்கர் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் தங்களது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளனர்.
இருப்பினும், இத்தொடரில் சில பலவீனங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு எபிசோடும் ஒரே மாதிரியான வடிவத்தில் (நீதிமன்ற விசாரணை தொடங்குவது, சாட்சியங்களின் மூலம் கடந்த காலக் காட்சி விவரிக்கப்படுவது, பின்னர் அடுத்த எபிசோடிற்கு நகர்வது) செல்வது போன்ற ஒரு செயற்கையான உணர்வைத் தருகிறது. கதையின் ஓட்டம் இயல்பாக இல்லாமல், திட்டமிடப்பட்டு நகர்வது போலவும், அண்டர்டாக் (Underdog) வழக்கறிஞர் பாணி ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதால் இறுதித் திருப்பம் முன்கூட்டியே யூகிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடுகிறது.
இருப்பினும் இந்த கோர்ட்ரூம் இன்வெஸ்டிகேஷன் கதை, ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான அனுபவமாக இருக்கும்.