ஐந்து மொழிகளில் பொங்கல் 2027-ல் வெளியாகும் நீலம் புரொடக்ஷன்ஸின் ‘வேட்டுவம்’.

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்த தயாரிப்பில், இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் பொங்கல் 2027 பண்டிகைக்கு வெளியாகவுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் முக்கியக் கதைக்களம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அதிகாரப்பூர்வ விபரங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக உலகம் அழிவுக்குப் பிந்தைய ஒரு கற்பனை உலகைக் காட்டும் ‘அப்போகலிப்டிக்’ (Apocalyptic) பின்னணியில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், வர்க்க மோதல்கள் மற்றும் எதிர்பாராத அதிரடித் திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான ஆக்‌ஷன் கதையாக இத்திரைப்படம் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் அனைத்தும், தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான ‘அடிமுறை’ மற்றும் ‘மல்லர் கம்பம்’உள்ளிட்ட கலைகளை அடிப்படையாகக் கொண்டு மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதற்காக, படத்தில் களம் இறங்கியுள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்புக்கு முன்பாகவே இத்தற்காப்புக் கலைகளில் முறையான நீண்டகாலப் பயிற்சிகளை மேற்கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். இத்திரைப்படத்தில் ஆர்யா, தினேஷ், ‘சார்பட்டா’ புகழ் ஷபீர், ஷோபிதா துலிபாலா மற்றும் கலையரசன் உள்ளிட்ட திரையுலகின் முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது இசை இப்படத்தின் உணர்வுபூர்வமான மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தண்டகாரண்யம்’ உள்ளிட்ட படங்களின் கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி இப்படத்தின் அப்போகலிப்டிக் உலகிற்கான கலைப் பணிகளை மேற்கொள்ள, ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். செல்வா ஆர்.கே. படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, அனல் பறக்கும் பாரம்பரியச் சண்டைக் காட்சிகளைத் திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார். பிரம்மாண்டமான உலகப் பின்னணி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் பான்-இந்தியத் திரைப்படமாகத் தயாராகியுள்ள ‘வேட்டுவம்’, வரும் 2027 பொங்கல் திருநாளில் உலகளாவிய ரசிகர்களைத் திரையரங்குகளில் சந்திக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது.