உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகும் ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படம்!

Bigg Boss Fame Sidhu and Dharshika Starrer Next Crime Thriller The Last Case

ட்ரீம் 7 சினிமாஸ் (Dream 7 Cinemas) நிறுவனத்தின் தயாரிப்பில், அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. பிக்பாஸ் புகழ் சித்து மற்றும் தர்ஷிகா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படத்திற்கு ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை முந்தைய பாகத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி இயக்க, அதன் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்படத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்தியேகப் போஸ்டர்கள், “ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும். அது குற்றவியல் சம்பந்தமான ஒரு கோட்பாட்டைத் திருத்தி எழுதும்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதன் மூலம் புலனாய்வு மற்றும் தடய அறிவியல் சார்ந்த பின்னணியில் இத்திரைக்கதை அமையவுள்ளது ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்து மற்றும் தர்ஷிகாவுடன் இணைந்து மூத்த குணச்சித்திர நடிகர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் பாலாஜி பேசுகையில்,

தங்களது முந்தைய படைப்பான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ஓடிடி (OTT) தளத்திலும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். அந்த மாபெரும் வெற்றி தந்த மகிழ்ச்சியோடு இந்த ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படத்தைத் தொடங்குவதாக அவர் தெரிவித்தார். முந்தைய படத்தில் பணியாற்றிய அதே ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்ட அதே தொழில்நுட்பக் குழுவினர் இதிலும் தங்களது பணிகளைத் தொடர்கின்றனர்.

முந்தைய படத்தைப் போலவே இதுவும் ஒரு மலைப்பகுதியில் நடைபெறும் குற்றப் புலனாய்வு சார்ந்த (Hill Station Crime Investigation) கதையாக இருந்தாலும், முந்தைய படத்தின் சாயல் ஏதுமின்றி முற்றிலும் மாறுபட்ட பின்னணியிலும், புதிய கதை சொல்லும் பாணியிலும் (Screenplay Structure) இப்படம் உருவாக்கப்படவுள்ளது. முந்தைய படத்தில் பேண்டஸி கூறுகள் கலந்திருந்த நிலையில், இதில் முற்றிலும் எதார்த்தமான உண்மைச் சம்பவங்களின் பின்னணியில், கதாபாத்திரத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. என்றார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.