குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

Raindrops Charity Foundation Announces 'Vaname Ellai' Initiative: First Flight Experience for Underprivileged Children and Elders on Children's Day

சமூகத்தில் வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட காலக் கனவுகளுக்குச் சிறகுகள் அளிக்கும் வகையில், ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷன் (Raindrops Charity Foundation) சார்பில் வரும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை’ என்ற உன்னதமான சமூக விழிப்புணர்வு முன்னெடுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக, வரும் நவம்பர் 14, 2026 சனிக்கிழமை அன்று, சென்னையிலிருந்து திருச்சிக்கு 50 பயனாளிகள் விமானம் மூலம் தங்களது வாழ்வில் முதன்முறையாக சிறப்புமிக்கப் பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

ஆனந்தம் கல்வி மையம், ஆனந்தம் சிறப்புப் பள்ளி, சேவாலயா, மாற்றம் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், அன்பகம் இல்லத்து முதியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர் மற்றும் ஒரு திருநம்பி ஆகியோர் இப்பயணத்தில் ஒன்றிணைகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தை அடைந்ததும் இப்பயணக் குழுவினர் கரிகால சோழனால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கல்லணை’ மற்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘தஞ்சைப் பெரிய கோயில்’ ஆகிய இடங்களை நேரில் கண்டு வியக்க உள்ளனர். இந்த வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, அனைவரும் ரயில் மூலம் சென்னைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். ஆனந்தம் டிரஸ்ட் மற்றும் வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம் பேராதரவுடன் நடைபெறும் இப்பயணத்தில் ரெயின்டிராப்ஸ் நல்லெண்ணத் தூதர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரைஹானா மற்றும் வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

இது குறித்துப் பேசிய ரெயின்டிராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால், “எளிய குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் விமானப் பயணம் என்பது வாழ்நாள் பெருங்கனவாக நீடிக்கிறது. அவர்களுக்கு வெறும் வான்வழிப் பயணத்தை மட்டும் வழங்குவது எங்கள் நோக்கமல்ல; மாறாக, அவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களது கனவுகளும் முக்கியமானவை என்ற உன்னத உணர்வை ஏற்படுத்துவதே எங்களது முதன்மை லட்சியம். கனவுகளுக்கு எவ்வித வயது வரம்போ, உடல் திறன் தடைகளோ இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.