விவாதத்தைக் கிளப்பிய பாடலுடன் களமிறங்கும் ‘பீட்சா பாய்ஸ்’!
Four Tamil Youths' Struggle in Bengaluru and the Viral Song Controversy
வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் இளைஞர்களின் வாழ்வியல் போராட்டத்தையும், அவர்களின் தொழில் கனவையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பீட்சா பாய்ஸ்’. செவன் ஹில்ஸ் சினிகிரியேஷன்ஸ் சார்பில் சங்கர்.கே.என் மற்றும் சஹானா சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை, சேகர் கேசவ் செரின் இயக்கி இசையமைத்துள்ளார்.
புதுமுக நாயகன் சிவம் சங்கர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘திறள்’ புகழ் அல்பியா நடித்துள்ளார். வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் தனிப்பாடலான “என்ன புடுங்க போற…” சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானதோடு, அதன் வரிகளுக்காகப் பல விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் படம் குறித்த சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சேகர் கேசவ் செரின்,
“இந்தியில் ‘சிக்கன் கரி லாவ்’ என்ற படத்தை இயக்கிய பிறகு, எனது இரண்டாவது படமாக ‘பீட்சா பாய்ஸ்’ படத்தை உருவாக்கியுள்ளேன். நான் தமிழனாக இருந்தாலும் புனேவில் பிறந்து வளர்ந்தவன். ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையின் வெளிப்பாடுதான் இந்தப் படம்.
பெங்களூரில் வாழும் நான்கு தமிழ் இளைஞர்கள், வாழ்க்கையில் முன்னேறச் சந்திக்கும் சவால்களும், அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதுமே கதை. முதல் பாதி கலகலப்பான நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராகவும் நகரும். சரத் லோஹித்ஸ்வா வில்லனாக மிரட்டியிருக்கிறார். பிற மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசுவதால், இதற்காகப் பெங்களூரைத் தேர்வு செய்தோம்,” என்று தெரிவித்தார்.

அறிமுக நாயகன் சிவம் சங்கர் தனது அனுபவம் குறித்துப் பகிர்கையில்,
“சிறிய தொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் கதை என்பதால் உடனே சம்மதித்தேன். முதல் படத்திலேயே மூன்று விதமான உடல் தோற்றங்களில் நடிக்க வேண்டியிருந்தது. இதற்காக உடல் எடையைக் குறைப்பதும், மீண்டும் அதிகரிப்பதும் சவாலாக இருந்தாலும், கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பால் அதை விரும்பிச் செய்தேன். உடன் நடித்த காக்கா முட்டை ரமேஷ், ஜிம் கிலி, அருள், சில்மிஷம் சிவா, சோப்ராஜ் ஆகியோர் சக நடிகர்களாக இல்லாமல் நிஜ நண்பர்களாகவே பழகிப் பெரிதும் உதவினார்கள்,” என்றார்.
நாயகி அல்பியா பேசும்போது,
“திறள் படத்திற்குப் பிறகு இது எனக்கு இரண்டாவது படம். வாழ்க்கையில் முன்னேறப் போராடும் அந்த நான்கு இளைஞர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பாடல்களும் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சுக்தேவ் சிங் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு குரு பிரசாத்.எம்.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் குமார் பாடல்களை எழுத, கணேஷ் குமார்.டி மற்றும் பவித்ரா.ஏ.கே படத்தொகுப்பையும், கணேஷ் குமார் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.