“கீர்த்திக்கு போன் பண்ணப்போ டமால்னு வச்சுட்டாங்க!” – மிஷ்கின் உடைத்த சீக்ரெட்!

"Her Parents Hung Up When They Heard My Name!" – Mysskin Shares Hilarious Throwback with Keerthy Suresh!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் (Drumsticks Productions) தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’.  கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மிஷ்கின், சாருகேஷ், பிரிகிடா, ஷில்பா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது . இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்..,

உடல்நலக்குறைவால் சற்று ஓய்வில் இருந்ததால் படத்தின் புரொமோஷன் பணிகளில் தாமதமாக இணைந்ததாகத் தெரிவித்தார்  இயக்குநர் மிஷ்கின் உடன் இணைந்து நடித்தது குறித்துப் பேசிய அவர், “முதல் நாள் படப்பிடிப்பில் மிஷ்கின் சார் போன்ற ஒரு சீனியர் கலைஞருடன் எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் இருந்தது.  ஆனால், இரண்டாவது நாளே நான் அவருடைய ‘பெட்’  ஆகிவிட்டேன் . என் மகளைப் போலவே இருக்கிறாய் என்று கூறி புகைப்படம் காட்டினார் . மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றிப் பேசும் அற்புதமான மனிதர் அவர் . திரையில் அவருடன் சரிசமமாகப் போட்டி போட்டு நடித்தது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்றார் .

இயக்குநர் பிரவீனை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலிருந்தே தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட கீர்த்தி , “பிரவீன் சாதாரண இயக்குநர்களைப் போல நாற்காலியில் அமர்ந்து மானிட்டர் பார்க்க மாட்டார் . காலில் சக்கரம் கட்டிக்கொண்டு உதவி இயக்குநர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார் . அவரும் நானும் ஒரே நாளில் பிறந்தவர்கள் (Birthday Partners) . அந்த வகையில் அவர் எனக்கு ஒரு சகோதரரைப் போல ஆகிவிட்டார் ,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும், இது ஒரு விறுவிறுப்பான ‘கோர்ட் ரூம் டிராமா’ (Courtroom Drama) என்றும் , சாம் சி.எஸ் இசையில் வெங்கட் பிரபு பாடியுள்ள பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார் . டப்பிங் பணியின் போது பிரிகிடாவின் நடிப்பைப் பார்த்து வியந்ததாகவும், படத்தில் அவருடைய ‘சாவித்திரி’ கதாபாத்திரம் அழகாக வந்துள்ளதாகவும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சாருகேஷ்,

“கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது என் வீட்டில்கூட யாரும் நம்பவில்லை . முதல் நாள் படப்பிடிப்பில் மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன் . ஆனால், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை கீர்த்தி மேம் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்து, என்னை இயல்பாக உணர வைத்தார் . அவருடன் நடித்தது ஒரு கனவு நனவானது போல் உள்ளது ,” என்றார். மிஷ்கின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து ரிகர்சல் நேரத்தில் வசனங்களை மாற்றிப் பேசி தன்னைக் கலாய்த்த சுவாரசிய நிகழ்வையும் சாருகேஷ் மேடையில் பகிர்ந்து கொண்டார் .

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், தன் பாணியில் கலகலப்பாகவும், அதே சமயம் பல நெகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்தும் மேடையை அதிர வைத்தார்.

அவர், தனது உரையைத் தொடங்கும் முன்பு, சமீபத்தில் காலமான பத்திரிகையாளர்கள் பரத் மற்றும் சபிதா ஜோசப் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்த மிஷ்கின், அரங்கில் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வைத்தார்.

“ஒவ்வொரு கலைஞனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் பத்திரிகையாளர்களின் அன்பும் வாழ்த்தும் இருக்கிறது” என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்துப் பேசிய மிஷ்கின்,

“படப்பிடிப்பின் முதல் இரண்டு நாட்கள் அவரிடம் சற்று இடைவெளி விட்டே பேசினேன். பின்னர், ‘என் மகள் உன்னைப் போலவே இருப்பாள்’ என்று நான் கூறியதும், ஒரு மகளாகவே என் கையைப் பிடித்துக் கொண்டார். ஒருமுறை என் படத்தில் நடிக்கக் கேட்டு கீர்த்தியின் வீட்டிற்கு போன் செய்தபோது, என் பெயரைக் கேட்டதுமே போனை வைத்துவிட்டார்கள். ஆனால், இன்று அவருடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. ‘மகாநடி’ படத்திற்குப் பிறகு கீர்த்தியின் நடிப்புத் திறமை உலகிற்கே தெரிந்தது. ‘டோரத்தி’ (Dharathi) படத்தில் ஒரு தாயாக அவர் வெளிப்படுத்திய கருணையைப் பார்த்து நான் வியந்து போனேன். ஸ்ரீதேவியை நாம் இழந்துவிட்டோம்; ஆனால் கீர்த்தி சுரேஷை சினிமா இழக்கக் கூடாது. அவர் இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும்,” என வாழ்த்தினார்.

இயக்குநர் பிரவீனை ‘7 அடி உயரமுள்ள 5 வயதுக் குழந்தை’ என வர்ணித்த மிஷ்கின், அவருடைய மனைவியின் தியாகத்தையும் மேடையில் பாராட்டினார். “ஒரு உதவி இயக்குநராக சினிமாவில் போராடிய காலத்தில், குடும்பச் சுமையைத் தாங்குவதற்காக அவருடைய மனைவி வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்த்து, மாதம் மாதம் பணம் அனுப்பி தன் கணவரின் சினிமா கனவை நனவாக்கியுள்ளார்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், படத்தின் பின்னணி இசையால் படத்தை 40 மதிப்பெண்ணிலிருந்து 80 மதிப்பெண்ணுக்கு சாம் சி.எஸ் உயர்த்திவிட்டதாக இயக்குநர் பிரவீன் தன்னிடம் கூறியதையும், சிறிதும் ஈகோ இல்லாத இயக்குநர் அவர் என்பதையும் மிஷ்கின் சுட்டிக்காட்டினார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய மிஷ்கின், “இந்த ஆண்டு வெளியாகும் படங்களை மக்கள் மிகுந்த அன்போடு திரையரங்குகளுக்கு வந்து ஆதரிக்கிறார்கள். இந்த வருடம் மட்டும் சுமார் 16 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, சூர்யாவுக்கு மூன்று படங்கள் ஹிட் அடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு படத்தில் கொஞ்சம் ஆன்மா இருந்தால்கூட மக்கள் திரையரங்கிற்கு வந்து கொண்டாடுகிறார்கள். அதேபோல, ‘சத்யவான் சாவித்திரி’ படத்தையும் ஆதரிக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

பேச்சின் இடையே வழக்கம்போலத் தனது ‘பன்னீர் சோடா’ குடிக்கும் அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து அரங்கைச் சிரிப்பலையில் ஆழ்த்திய மிஷ்கின், மேடையில் இருந்த படக்குழுவினருக்கு மோதிரங்களைப் பரிசளித்தார். மேலும், தொகுப்பாளினி அன்போடு கேட்டதற்காக, தான் கையில் கட்டியிருந்த வாட்சையும் கழற்றி மேடையிலேயே பரிசாகக் கொடுத்து அசத்தினார்.