உலக மீனவர் தினத்தில் வெளியானது ‘தமிழினி’ ஃபர்ஸ்ட் லுக்!
Shot in Just 24 Days Across 8 Coastal Towns: Vijay TV Fame Santhosh Balaji Composes for 'Thamizhini'!
மனித உறவுகள், குடும்பப் பிணைப்புகள் மற்றும் தனிப்பட்ட தியாகங்களை மையமாகக் கொண்டு, கடலோர மீனவ சமூக மக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘தமிழினி’. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, மீனவ சமூக மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டி.பி. சரவணன் மற்றும் விஜிலா சரவணன் தயாரிப்பில், கணேஷ் மூர்த்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், சன் மியூசிக் தொகுப்பாளரும் யூடியூபருமான விஜே ஆஷிக் மற்றும் பிரதீப் ராஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக ‘என்ன விலை’ படப்புகழ் ஷாஷா சிவகுமார் மற்றும் புஷ்பலதா நடிக்க, தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் ராய் ஆகியோருடன் தயாரிப்பாளர் டி.பி. சரவணனும் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனிப்பட்ட மகிழ்ச்சிக்கும், தங்களைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்திற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளையும், மீனவக் குடும்பங்களின் மன உறுதியையும் இப்படம் யதார்த்தமாகப் பேசுகிறது.

இப்படத்திற்கு ‘சூப்பர் சிங்கர்’ புகழ் சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார், சைந்தவி, சிவாங்கி கிருஷ்ணகுமார், சாம் விஷால் மற்றும் சந்தோஷ் பாலாஜி ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். ஹசிம், வைரபாரதி மற்றும் மாதேஷ் சூர்யகுமார் பாடல் வரிகளை எழுத, விஜய் வெங்கட் மற்றும் சரண்யா கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இயக்குநர் கணேஷ் மூர்த்தியே திரைக்கதை மற்றும் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, தேவாவுடன் இணைந்து கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். முட்டம், உவரி, கடியப்பட்டினம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரியதாழை மற்றும் மணப்பாடு எனத் தமிழகத்தின் எட்டு தென்கடலோரப் பகுதிகளில் வெறும் 24 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘தமிழினி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.