பான் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுக்கும் சாம் சி எஸ்!

100 Films Strong: Sam CS Lines Up Mega Collaborations with Ram Pothineni, H. Vinoth, and Pushkar-Gayatri!

தனது தனித்துவமான பின்னணி இசை, சவுண்ட் டிசைன் மற்றும் கதைக்கேற்ற இசை மொழி மூலம் தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பதித்திருப்பவர் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மூலம் 100 படங்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்த பின்னரும் வேகம் குறையாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் வெப் சீரிஸ் எனப் பல்வேறு தளங்களிலும் புதிய முயற்சிகளுடன் வலம் வருகிறார். சமீபத்தில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த கன்னடத் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’ படத்தில் இவரது பின்னணி இசைக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டுகளைத் தொடர்ந்து, தற்போது அவரது இசைப் பயணத்தில் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள் வரிசைகட்டி நிற்கின்றன.

அந்த வகையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், தெலுங்கு நட்சத்திரம் ராம் பொதினேனி முதன்முறையாக எழுதி, இயக்கி நடிக்கும் ‘#RAPO23’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டீசரும் வெளியாக உள்ளது. கிருஷ்ணா பொதினேனி தயாரிப்பில் சம்யுக்தா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடிக்கும் இந்த பான் இந்திய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் ஒரு படத்தின் வெளியீடும், மற்றொரு பிரம்மாண்ட படத்தின் டீசர் வெளியீடும் அமைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக அமைந்துள்ளது.

இதற்கிடையில், 2027 பொங்கல் விருந்தாகத் திரைக்கு வரவுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் ஏற்கனவே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், முந்தைய பாகத்தைப் போலவே மூன்றாம் பாகத்திலும் சாம் சி எஸ்ஸின் மிரட்டலான பின்னணி இசைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், ‘கராத்தே பாபு’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வரும் அவர், இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் ஹெச். வினோத் ஆகியோரின் அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளிலும் இணைந்துள்ளார். ‘கைதி’, ‘வணங்கான்’ போன்ற படங்களில் கதையின் தீவிரத்தை இசையால் கடத்தியதுடன், காதல் மெலடிகளிலும் முத்திரை பதித்து வரும் சாம் சி எஸ், புதிய மொழிகள் மற்றும் புதிய கூட்டணிகளுடன் இந்தியத் திரையுலகில் தனது அடுத்தகட்டப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.