‘ஹலோ காதல்’ என் மனைவியின் விருப்பத்திற்காக நடித்த படம். – ஆர்யா!

ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,

“‘ஹலோ காதல்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இப்படத்தில் நடித்து தயாரித்திருக்கும் ஜாமுடன் இணைந்து எனது திரைப் பயணத்தைத் தொடங்கினேன். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’ எனத் தொடர்ந்து இருவரும் இணைந்து பல முக்கியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளோம். மலையாளத்தில் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் நிகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ‘ராஜா ராணி’ படத்தைப் போலவே இனிமையான காதல் கதையைக் கொண்டுள்ளது. ஆர்யா, நிகிலா, வைஷ்ணவி ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தில் ஆர்.ஜே. பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘கண்ணும் கண்ணும்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கான பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில்,

“‘ஹலோ காதல்’ படத்தின் கதையை முதலில் மலையாளத்தில் கேட்டேன். இயக்குநர் தமிழுக்கு வந்த பிறகு இப்படத்தில் இணைந்தேன். ஆர்யா சாருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வைஷ்ணவியுடன் இணைந்து நடித்த காட்சிகளிலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் ஜீவா சார் என்னை மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.

இயக்குநர் நிகில் முரளி பேசுகையில்,

“ஆர்யா சாரின் வீட்டிற்குச் சென்று கதையைப் பேசிய தருணமும், இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் சிறப்பானது. படத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ், ஆர்யா, வைஷ்ணவி, ஜீவா சார், மோகன் சார், நௌஷத், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு மற்றும் சாயிஷா மேம் ஆகியோரின் திறமையும் ஒத்துழைப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில் ,

“நீண்ட நாட்களாக ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால், சாயிஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு லைட்டான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தில் இணைந்தேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்திற்குப் பிறகு ஜீவா சாரின் ஆசீர்வாதமும் இப்படத்தில் கிடைத்துள்ளது. கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது கிஷோர் சார் மூலமாக இப்படத்தின் கதையைக் கேட்டேன். மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இல்லாமல், இன்றைய பார்வையாளர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் வகையில் இயல்பாகவும் புத்துணர்ச்சியுடனும் கதை அமைந்திருந்தது. ஜி.வி. பிரகாஷ், நிகிலா விமல், இயக்குநர் நிகில், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு, சதீஷ், ஷ்யாம், வெங்கட் சார் மற்றும் தயாரிப்பாளர்கள் கிரீஷ் மாத்ருபூதம், விக்னேஷ் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. படத்திற்குப் பலமாக இருக்கும் ஜீ குழுவினருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.