அக்ஷய் குமாரின் ‘ராவடி’ படத்தின் ‘குஜிலி மஸ்து’ பாடல்! இணையத்தில் வைரல்!

Basil Joseph and LK Akshay Kumar’s Youthful Vibe ‘Gujili Masthu’ from ‘Raawadi’ Goes Viral Ahead of Christmas Release!

தென்னிந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த எல்.கே. அக்ஷய் குமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில், இளைஞர்களைக் கவரும் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘குஜிலி மஸ்து’ (Gujili Masthu) பாடல் மற்றும் அதன் வீடியோ, சென்னை கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் படக்குழுவினரால் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ‘அட்ரா பரமா’ எனும் முதல் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று இணையத்தில் சாதனை படைத்த நிலையில், ரசிகர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கும் வகையில் இந்த இரண்டாவது பாடல் அமைந்துள்ளது. செம்வி மற்றும் ராம் சே ஆகியோரின் துள்ளலான வரிகளுக்கு, இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் அட்டகாசமான குத்து இசையைக் கொடுத்துள்ளார். பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் மற்றும் ஜென் மார்ட்டின் ஆகியோரின் கம்பீரமான குரல் பாடலுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.

“வணக்கம் எவ்ரிபடி… குஜிலி மஸ்து… எல்லாரும் மஜா பண்ண ரெடியா இருக்கீங்களா..?” என்ற உற்சாகமான அழைப்புடன் தொடங்கும் இப்பாடல், ஆரம்பம் முதல் இறுதி வரை கொண்டாட்ட மனநிலையைத் தருகிறது. திரையரங்கப் பின்னணியில் பேசில் ஜோசப்பின் ஸ்டைலான தோற்றம், நண்பர்கள் இணைந்து பிடித்த நடிகரின் படத்தைத் திரையரங்கில் கொண்டாடும் தருணங்கள் மற்றும் கல்லூரி விடுதியில் சீனியர் – ஜூனியர் இடையிலான கலகலப்பான நட்பு எனப் பாடல் முழுவதும் இளமைத் துள்ளல் நிறைந்துள்ளது. குறிப்பாக, இப்பாடலில் இடம்பெற்றுள்ள எளிமையான ‘ஹூக் ஸ்டெப்ஸ்’ இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வைரலாகி வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு, எல்.கே. விஷ்ணுகுமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பேசில் ஜோசப் மற்றும் எல்.கே. அக்ஷய் குமாருடன் ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடுத்தடுத்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், ‘ராவடி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.