ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது,
விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது,
இந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்” என்றார்.
அம்மா கிரியேஷன் சிவா பேசுகையில்,
“ஞானவேல் ராஜா தான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன். இந்த மெஹந்தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப்படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்” என்றார்.
ஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியதாவது,
மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில் இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி ” என்றார்.
இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,
“மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது,
“ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல் இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் இயக்குநர் நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப்படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப்படம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும். ” என்றார்.
படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,
“மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்
படத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசியதாவது,
“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,
“இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.
இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது,
“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார்.
மெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது