வடகிழக்கு இந்தியா, நேபாளம் ஒட்டியுள்ள பகுதிகளில் சிறிய சமூகக் குழுக்களாக வாழ்ந்து வருபவர்கள் போடோ மக்கள். அவர்களில் ஒரு குழு, சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அவர்களிடம் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்குவதாகவும், கோரிக்கைகள் நிறை வேற்றி தருவதாகவும் கூறுகிறார்’டிஜிபி’ சுமன். அவர் சொல்வதை கேட்டு சரணடைகிறது அந்தக் குழு.
அப்படி சரணடைந்த அந்தக்குழுவின் தலைவனை கொன்றுவிட்டு மற்றவர்களை சிறையிலடைத்து விடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 5 தீவிரவாதிகள் சிறையிலிருந்து தப்பித்து ‘டிஜிபி’ சுமனை கொல்ல நள்ளிரவில் அவர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைகின்றனர். அதே சமயத்தில் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் சுமன் வீட்டிற்குள் பணத்தைக் கொள்ளையடிக்க நுழைகிறார். துரதிஷ்டமாக இவர்களுடன் சுமன் வளர்க்கும் நாயும் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறது அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘வாட்ச்மேன்’ படத்தின் க்ளைமாக்ஸ்.
இயக்குனர் விஜய் படமென்றால் அதில் ஒரு எமோஷனல் இன்டலிஜன்ட் இருக்கும். இந்தப்படத்தில் அது டோட்டல் மிஸ்ஸிங். பார்த்து பயப்பட வேண்டிய போடோ தீவிரவாதிகளை முழு முட்டாள்களாக வடிவமைத்து சிரிக்கவைத்திருக்கிறார். திரைக்கதையில் எந்தவொரு பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லாமல் நகர்கிறது. பிராணிகளில் மிகவும் நன்றியுணர்வும், புத்திசாலித்தனமும் மிக்க விலங்கு நாய். அதையும் தவறாக சித்தரித்துள்ளார். அதற்கு சுமன் விளக்கம் கொடுப்பது தான் கொடுமை! படத்தின் எந்த்வொரு காட்சியிலும் நம்பகத்தன்மையில்லாமல் இருப்பது படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம்.
படத்தின் நீளம் என்னவோ ஒன்றரை மணி நேரம் தான் ஆனால் இரண்டரை மணி நேரம் பார்ப்பது போன்ற அலுப்பு வருகிறது. எடிட்டிங் மற்றும் பின்னணி இசையால் படத்திற்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. ஹீரோ ஜீவிக்கு இது அவர் நடிப்பில வந்த்திருக்கும் இன்னொரு படம் அவ்வளவு தான். ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டேவுக்கு ரெண்டு மூனு சீன் தான். யோகி பாபு, முனீஷ்காந்த் ரெண்டு சிரிக்கவைக்கிறேன்னு படுத்துறாங்க.
ஒரு நல்ல கதை கிடைத்தும் அதை கோட்டை விட்டுள்ளனர்.