ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். ராஜுமுருகனின் கதை, வசனத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன்.
‘மாதம்பட்டி’ ரங்கராஜ் ,ஸ்வேதா திரிபாதி இருவரும் இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள். பாதி ஹிந்தியிலும், பாதி ஆங்கிலமுமாக தலைப்பை கொண்டுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ எப்படி இருக்கிறது?
கொடைக்கானலின் அழகிய பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து சாதிய நம்பிக்கையில் அதிக ஈடுபாடுடையவர். அவரின் மகனான மாதம்பட்டி ரங்கராஜ் பாடல் பதிவு செய்து கொடுக்கும் மியுசிக்கல்ஸ் நடத்தி வருகிறார். அங்குள்ள இளைஞர்களின் காதல் வளர இவர் பதிவு செய்து கொடுக்கும் இளையராஜாவின் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கிறது. இப்படி காதல் வயப்பட்டு ஊரை விட்டு ஓடிப்போகும் ஜோடிகளுக்கு ஆதரவு அளிக்கிறார் ஃபாஸ்டர் வேல. ராமமூர்த்தி.
ஊர் ஊராக சென்று சர்க்கஸ் கூடாரம் அமைத்து பிழைப்பு நடத்தும் ஒரு குழு பூம்பாறை கிராமத்திற்கு வருகிறது. ஊர் மக்கள் அனைவரும் அவர்கள் காட்டும் வித்தையில் அசர.. மாதம்பட்டி’ ரங்கராஜ் மட்டும் சர்க்கஸ் முதலாளி சன்னி சார்லஸின் மகளான ஸ்வேதா திரிபாதியின் அழகில் மயங்கி காதல் கொள்கிறார். அவ்வப்போது பார்வைகள் மூலமாக வளர்ந்து வந்த இவர்களது காதல் மெல்ல மெல்ல வளர்ந்து முழு வடிவம் கொள்கிறது. இருவரது வீடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்ப மாரிமுத்துவினால் சர்க்கஸ் கூடாரம் தீயிட்டுக்கொளுத்தப்படுகிறது. இதன் பிறகு நடக்கும் இதயம் பிசையும் காதலின் தேடல்கள் தான் “மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் க்ளைமாக்ஸ்!
வட இந்திய பெண்ணுக்கும் தென்னிந்திய பையனுக்குமான காதல் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தோட பெரிய பலமாக இருப்பது சதீஷ்குமாரின் ஆர்ட் டைரக்சன் தான். 90களில் கிடைத்த எல்.பி.ரெக்கார்ட்ஸ், கேஸட் , டேப் ரெக்கார்டர் , ‘இன்ட் சுஸூகி’ பைக் உள்ளிட்ட பல பொருட்கள் நம்மை அந்த காலக்கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. அதே போல் அறிமுக ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். இரண்டு விதமான தோற்றங்களிலும் வித்தியாசப் படுத்தி நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சர்க்கஸ் பெண்ணாக நடித்திருக்கும் ஸ்வேதா திரிபாதியும் அவரது அப்பாவாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ், மற்றும் கத்திவீசும் அன்கூர் விகாஷ் ஆகியோர் நிஜமான சர்க்கஸ்காரர்களாகவே தெரிகின்றனர். சன்னி சார்லஸ், காதலை மறுத்து மாதம்பட்டி’ ரங்கராஜிடம் கெஞ்சும் போதும் ‘என் பொண்ணை நிக்க வச்சு அவ மேல கத்தி படாம வீசிட்டு கூட்டி போ ‘ என சவால் விடும் காட்சியும் சூப்பர். நிறைவான தேர்ந்த நடிப்பு. விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம்!
சந்தர்ப்பவசத்தால் பிரிந்த காதலர்கள் சந்திக்கும் க்ளைமாக்ஸ், சினிமா விதிகளுக்குள் சிக்கிய காட்சி என்றாலும் அதில் ஜீவனிருப்பதை மறுபதற்க்கில்லை. ‘கல்யாணம் பண்ணிகிட்டதாலேயே புருஷன் இல்லை’ என காதலின் புனிதம் பேசும் ஸ்வேதா திரிபாதியின் கதாபாத்திரம் நியாயமானது. கூடவே இருந்து மாதம்பட்டி ரங்கராஜின் காதலியை அபகரிக்கும் அன்கூர் விகாஷ் கதாபாத்திரம் சூப்பர் ட்விஸ்ட்!
படத்தின் பாதி வெற்றியை நிர்னயிப்பது அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான். இந்தப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். RJ விக்னேஷ் மட்டும் வழக்கம் போல் சிரிக்க வைப்பதுக்கு பதிலாக கொல்றாரு.
படத்தில் இடம் பெறும் இளையராஜா எ.ம்எஸ்.வி பாடல்களை கேட்பதே தனி சுகம் தான். அதிலும் மாதம் பட்டி ரங்கராஜும், ஸ்வேதா திரிபாதியும் சந்திக்கும் போது ஒலிக்கும் ‘தில்லி கா தஹ்’ படத்தில் இடம் பெற்ற ‘யே ராத்தென்.. யே மௌசம்.. நாடி கா கினாரா..’ பாட்டு வராத காதலைக் கூட வர வைத்துவிடும் . இயக்குனருக்கு அபார காதல் ரசனை. படம் முழுவதும் இந்த பாடல்களை ஒலிக்கச் செய்திருந்தால் அழகான ஒரு மியுசிக்கல் லவ் படமா இருந்திருக்கும்.
sk.செல்வகுமாரின் ஒளிப்பதிவு கொடைக்காணல் அழகை பிரதிபலிக்கிறது. ஷான்ரோல்டன் இசையமைப்பில் பாடல்கள், பின்னணி இசை ஓகே… ராஜுமுருகனின் கதையை முடிந்தவரை சிதைக்காமல் திரைக்கதையாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரவணராஜேந்திரன்.
‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா’
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே
அந்த மாதிரி காதல் இல்ல இந்த மெஹந்தியின் காதல். இது புனிதமான காதல்.