‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா,நடிகை சனம் ஷெட்டி ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .
விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது ,
“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம் ?
எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார் ? சினிமா ஒரு நல்ல அருமையான தொழில் .இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது .இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது.. அது பலருக்கும் தெரிவதில்லை .நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் . இதுவரை சொல்லாத விஷயம் அது. நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன்.
இங்கே இயக்குநரை நடிகை தீபா அப்பா என்று அழைத்தார்.அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை .அது பெருமையான விஷயம் .அப்படிப்பட்ட சினிமா இன்று எப்படி இருக்கிறது ? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது?
இன்று எல்லா படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன .சிறிய படங்கள் வெளியாகின்றன வசூல் தான் வரமாட்டேன் என்கிறது . அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய் . தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும். ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி வரைமுறைப்படுத்த வேண்டும் .
பெரிய ஹீரோக்கள் தங்கள் படம் மட்டும் ஓடினால் போதும் என்று நினைக்கிறார்கள் .சினிமா பற்றி யாரும் கவலைப்படவில்லை . 100 கோடி ,60 கோடி, 50 கோடி என்று வாங்கி விட்டு தன் படம் ஓடினால் மட்டும் போதுமென்று நினைப்பதை மாற்ற வேண்டும் .
அமெரிக்காவில் இருப்பது போல் இங்கேயும் வசூலில் பங்கு என்கிற முறை வரவேண்டும் .அதனால் தான் அமெரிக்காவில் எல்லா படங்களும் ஓடுகின்றன. ஒன்றை ஒன்று வசூலில் முறியடிக்கின்றன.இது போன்ற ஏற்பாடு செய்து இருப்பதால்தான் அங்கே எல்லாப் படங்களும் வெற்றி பெறுகின்றன.
இது புதிய விஷயம் அல்ல .இந்த முறைப்படுத்துதல் செய்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். இங்கே ஒரு கூட்டம் மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது .ஒரு கூட்டம் மட்டும் இழந்து கொண்டே இருக்கிறது.
திரையைப்பார்க்க முடியாமல் இங்கே 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் ,திரைப்பட வர்த்தக சபை, நடிகர் சங்கம் என்று பல சங்கங்கள் இருக்கின்றன ஆனால் யார் என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. இப்படி இருந்தால் எப்படி சினிமா வளரும் ? இதில் மாற்றம் செய்ய வேண்டும் .
சினிமாவில் உள்ள ஒரு தவறான போக்கு ஒரு படம் ஓடி விட்டால் இயக்குநர்கள் தன்னால் தான் எல்லாம் நடந்தது என்று தானாகவே முளைத்து வந்தது போல் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் .ஒரு பட வெற்றிக்கு அகந்தையுடன் இருந்தால் அடுத்தப்படம் தோல்வியடையும் போது யாரும் கூட இருப்பதில்லை –
இங்குள்ள உள்ள பிரச்சினை என்னவென்றால் நல்ல இயக்குநரை யாரும் கண்டு கொள்வதில்லை . நடிகர்கள் யாருடனும் நட்பு நட்புறவுடன் இருப்பதில்லை . திறமைசாலிகளை யாரும் கண்டு கொள்வதில்லை .. இது மாற வேண்டும்.” இவ்வாறு ஆர்.வி.உதய குமார் பேசினார் .