கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து, கடந்த சில வாரங்களாக பாஜக கட்சியினரிடையே பரப்பரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், அது முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 20 வருடங்களாக மக்களிடையே பாஜக வின் மொத்த உருவாமாக பிரதிபலித்து வருபவர் பி.எஸ். எடியூரப்பா. நான்காவது முறையாக முதல்வராக இருக்கும் அவருக்கு இந்த முறை கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.
பி.எஸ். எடியூரப்பாவின் மகன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக கூறி அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டு கட்சி மேலிடத்தில் சரமாரி புகாரளித்தனர்.
இதன் காரணமாக பாஜக தலைமை பி.எஸ். எடியூரப்பாவை மாற்றும் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து, கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று பி.எஸ். எடியூரப்பா, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.
அதற்கு முன்னதாக, பெங்களூருவில் உள்ள விதான் செளதா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “முதல்வர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியாகவே ராஜினாமா செய்கிறேன்,” என்றார்.
மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றி.
என்றும் கட்சிக்காக உழைப்பேன்,” என உணர்ச்சி மேலிட பேசினார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் தமது முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி விலகுவார் என்று கர்நாடகா பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.