‘A1’  படம்  பிரம்மாண்ட வெற்றி பெறும்  சந்தானம் நம்பிக்கை!

‘சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில் சந்தானம் நடித்து ஜான்சன் .கே எழுதி, இயக்கியுள்ள  படம் A1.    ஜுலை 26 ஆம் தேதி  வெளியாகவுள்ள  இப்படத்தை ’18 ரீல்ஸ்’  எஸ்.பி சவுத்ரி   வெளியிடுகிறார்.

 

இப்படம் குறித்து சந்தானம் கூறியிருப்பதாவது…

 

“தில்லுக்கு துட்டு 2”  படத்தை வெற்றிப் படமாக்கிய உங்களுக்கு என்னுடைய முதல் நன்றி. A1 படத்தின் கதையை  இயக்குனர் ஜான்சன்  சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன்.

 

2000 ல்  டீவில அறிமுகமானேன்  இப்போ  வரைக்கும்  ஓரளவு  நான் தாக்குப்பிடிச்சுப்  போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா  நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ  டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார்.

 

ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர் பாடில பிறந்து வளர்ந்த ஆளு.  அங்க உள்ள கதையை தான் படமாக்கி  இருக்கார்.  இது ‘சூது கவ்வும்’ பேட்டன்ல  ஒரு  படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரே மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார்.

 

கேமராமேன்  செட்டுக்கு  ஹீரோ மாதிரி வருவாப்ல. என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர்.

பைட் மாஸ்டர் ‘இனிமே இப்படித்தான்’ படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார்.

இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்கி வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம் இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன். ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்ட  மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா.. படத்தை எடுத்துட்டு  ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எல் வருது, ‘அவெஞ்செர்ஸ்’ வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு.  நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்

 

மேலும் படத்தில் வேலை செய்த  அத்தனை பேர்களின் பெயர்களையும் சொல்லி சந்தானம் நன்றி சொன்னார்.