இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இணையத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தை மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு /ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.